வாகனச்சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சங்கர் நகர் போலீஸாரைப் பார்த்ததும் அவ்வழியாக வந்த ஆட்டோ இன்னும் வேகமெடுத்தது.
ஆட்டோவை வழிமறித்தபோது அதில் பயணித்த 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். தற்போது அவர்கள் புதுச்சட்டையால் போலீஸாரிடம் சிக்கியிருக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தை அடுத்த பம்மல் சத்யாநகர் அறிஞர் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் முத்தையா(45). ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர், வழக்கம் போல ஆட்டோவை தன் வீட்டின் அருகில் கடந்த 13 -ம் தேதி இரவு நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றார்.
பின்னர் மறுநாள் காலை வெளியில் வந்து பார்த்தபோது ஆட்டோவைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அதனால், சங்கர் நகர் காவல் நிலையத்தில் முத்தையா புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸார் ஆட்டோ குறித்து விசாரித்தனர். சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்தபோது எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. அதனால் முத்தையாவின் ஆட்டோவைக் கண்டுபிடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.
ஆட்டோ
இந்தநிலையில் அனகாபுத்தூர் பகுதியில் கடந்த 29-ம் தேதி சங்கர் நகர் போலீஸார் இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஆட்டோவை போலீஸார் நிறுத்தி, ஆட்டோ குறித்த ஆவணங்களைக் கேட்டனர்.
அதற்கு ஆட்டோவுக்குள் இருந்த 3 இளைஞர்களும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர்.
அவர்களைப் போலீஸார் விரட்டிச் சென்றனர். ஆனால் அவர்கள் மூன்று பேரும் தப்பி விட்டனர்.

இதையடுத்து அநாதையாக நின்ற ஆட்டோவை காவல் நிலையத்துக்கு போலீஸார் கொண்டு வந்தனர். பின்னர் விசாரித்தபோது பம்மல் சத்யாநகர், அறிஞர் அண்ணா தெருவில் திருடப்பட்ட ஆட்டோ எனத் தெரியவந்தது.
ஆட்டோ கிடைத்த தகவலை முத்தையாவுக்கு போலீஸார் போனில் கூறினர். இந்தச் சமயத்தில் ஆட்டோவை முழுமையாக போலீஸார் சோதனை செய்தபோது அங்கு ஒரு பார்சல் இருந்ததைப் போலீஸார் பார்த்தனர்.
புதுச்சட்டை
அதைப் பிரித்து பார்த்தபோது புதிய டிரஸ்கள் இருந்தன. அந்த டிரஸ்கள் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் சமீபத்தில் எடுக்கப்பட்டதைக் கண்டறிந்த போலீஸார் ஆட்டோவில் வந்த நபர்கள் குறித்த தகவல் கிடைக்குமா என்ற கோணத்தில் விசாரித்தனர்.
இதற்காக ஸ்ரீபெரும்புதூருக்குச் சென்று ஜவுளிக் கடை உரிமையாளரிடம் விவரத்தைக் கூறிய போலீஸார், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 3 இளைஞர்கள் புதிய சட்டைகள் அங்கு வாங்கும் காட்சி பதிவாகியிருந்தது.
அதை வைத்து போலீஸார் விசாரித்தபோது குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த விஜய பிரதாப்(19) திருநீர்மலை பகுதியைச் சேர்ந்த வினோத்(25) மற்றும் பாஸ்கர்(24) ஆகிய 3 பேர் என தெரியவந்தது.
அதனால் அவர்களைப் பிடிக்க போலீஸார் சென்றபோது வினோத் தப்பி ஓடிவிட்டார். விஜயபிரதாப், பாஸ்கர் ஆகியோர் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டனர். அவர்களிடம் விசாரித்தபோது ஆட்டோவைத் திருடியதை ஒப்புக்கொண்டனர்.
அதோடு சில மாதங்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பைக்குகளையும் திருடி குறைந்த விலைக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் சிறையில் அடைத்தனர்.