சென்னையில் தனியாக இருந்த அம்மாவுக்காக சிசிடிவி கேமராக்களைப் பொருத்திய மகன், அதை தினந்தோறும் தன்னுடைய செல்போனில் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அதனால் சென்னையில் நடந்த திருட்டு சம்பவத்தை அவர் கண்டுபிடித்துள்ளார்.
சென்னை போரூர் அடுத்த செட்டியார் அகரம் மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சண்முக சுந்தர வள்ளி(67), இவருக்கு அருள்முருகன் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் அயர்லாந்தில் குடியிருந்து வருகிறார். மகள், சென்னை அண்ணாநகரில் வசிக்கிறார்.
மகளைப் பார்க்க வீட்டை பூட்டி விட்டு சண்முகசுந்தரவள்ளி சென்றார். தனியாக வீட்டில் குடியிருந்ததால் சண்முகசுந்தரவள்ளியின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தது. அதை அயர்லாந்திலிருக்கும் மகன் அருள்முருகன், தன்னுடைய செல்போன் மூலம் அடிக்கடி பார்த்துக் கொள்வார்.

சென்னையில் சண்முகசுந்தர வள்ளி குடியிருந்த வீடு பூட்டியிருந்தால் நேற்றிரவு அயர்லாந்தில் இருந்தப்படியே அருள்முருகன் கண்காணித்தார். அப்போது, வீட்டில் இளைஞர் ஒருவரின் நடமாட்டம் இருப்பதைப் பார்த்த அருள்முருகன் அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக செல்போனில் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட அருள்முருகன், விவரத்தைக் கூறினார். இதையடுத்து சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையிலிருந்து மதுரவாயல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்தனர்.
ஆனால் வீடு பூட்டப்பட்டியிருந்தது. உடனே போலீஸார் உள்ளே எட்டிப்பார்த்தனர். அப்போது, இளைஞர் ஒருவர் கையில் லேப்டாப் மற்றும் கடப்பாரை கம்பியோடு சுவர் ஏறிக் குதித்தார். அதைப்பார்த்த போலீஸார் அந்த இளைஞரை மடக்கிப்பிடித்தனர்.

பின்னர், அவரை விசாரணைக்காக மதுரவாயல் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவரின் பெயர் முரளி என்றும் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்து லேப்டாப்பை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த விவரத்தை அருள் முருகனுக்கும் போலீஸார் தெரிவித்தனர். முரளி மீது சென்னையில் சில குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது.
முரளி குறித்து இன்னொரு தகவலும் போலீஸாருக்கு கிடைத்தது. முரளி, ஒரு பெண்ணைக் காதலித்துள்ளார். ஆனால் அந்தக் காதல் தோல்வியடைந்துள்ளது. அதனால் மனவிரக்தியடைந்த முரளி, காதலியின் நினைவுகள் வரும்போதெல்லாம் சைக்கோ போல நடந்துக் கொள்வராம்.

அப்போது கையில் கிடைக்கும் கூர்மையான ஆயுதத்தை உடல் முழுவதும் காயத்தை ஏற்படுத்திக் கொள்வார். அதனால் முரளியை சைக்கோ முரளி என்றே பலர் அழைப்பதுண்டு. மேலும் முரளி, எங்கு திருடினாலும் அடுத்த சில தினங்களிலேயே அவர் போலீஸாரிடம் சிக்கிக் கொள்வார்.
வீட்டில் ஆள் இல்லை என்பதை முரளி கண்டறிவதில் கில்லாடி என்கின்றனர் போலீஸார். இரவில் வீடுகளை நோட்டமிடும் முரளி, எந்த வீட்டில் கோலம் போடாமல் குப்பைகள் கிடக்கிறதோ அந்த வீட்டில் ஆள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு உள்ளே நுழைந்துவிடுவார் என்கின்றனர் போலீஸார்.
