‘கவரிங் நகைகள்தானே திருடினேன்’ – போலீஸாரிடம் கெஞ்சிய இளைஞர்

சார், நான் திருடியது கவரிங் நகைகள்தானே என்னை மன்னித்து விட்டுவிடுங்கள் என்று போலீஸாரிடம் இளைஞர் கெஞ்சியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை, தாம்பரம் இரும்புலியூர் தமிழ்பூங்கா தெருவைச் சேர்ந்த ஜீவானந்தம் வீட்டில் நேற்று கொள்ளை நடந்தது. இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் 18 சவரன் தங்க நகைகள் தப்பின.

ஆனால் 100 சவரன் கவரிங் நகைகள், பணம், பட்டுப்புடவைகள் கொள்ளைப்போனதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து ஜீவானந்தம் தாம்பரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின்பேரில் தாம்பரம் போலீஸார் ஜீவானந்தம் வீட்டுக்கு வந்து விசாரித்தனர்.

கத்திரிக்கோல்

கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர். சிசிடிவி கேமரா பதிவுகள், செல்போன் சிக்னல்கள், கைரேகைகள் ஆகியவற்றின் அடிப்படையில் கொள்ளையர்களை போலீஸார் தேடினர்.

இந்தச் சமயத்தில் ஜீவானந்தம் வீட்டில் எடுக்கப்பட்ட கைரேகை, மதுரவாயல் மேட்டுகுப்பத்தைச் சேர்ந்த செல்வா என்கிற வெள்ளை செல்வா (19) என்பவரின் கைரேகையுடன் ஒத்துப்போனது. இதையடுத்து செல்வாவை போலீஸார் தேடினர்.

போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில் செல்வா சிக்கினார். அவரிடம் விசாரித்தபோது கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார். பின்னர் செல்வாவிடமிருந்து பட்டுப்புடவைகள், பணம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கவரிங் நகைகள் கொள்ளை நடந்த வீடு
கொள்ளை நடந்த வீடு

கவரிங் நகைகள் குறித்து செல்வாவிடம் விசாரித்தபோது அதை கோபத்தில் தூக்கி எரிந்துவிட்டேன் என்று கூறினார்.

யார் இந்த செல்வா?

செல்வா மீது தாம்பரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். செல்வா மீது 3 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. குற்ற வழக்கில் கைதான செல்வா, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

சுதந்திரத்தினத்தன்றுதான் செல்வா சிறையிலிருந்து வெளியில் வந்துள்ளார். அவரிடம் பணம் இல்லை. அதனால் கொள்ளையடிக்க திட்டமிட்டார்.

கொள்ளை நடந்த வீடு
கொள்ளை நடந்த வீடு

இதற்காக மதுரவாயலிலிருந்து இரும்புலியூருக்கு வந்த செல்வா, வீடுகளை நோட்டமிட்டார். அப்போது ஜீவானந்தத்தின் வீடு பூட்டியிருந்ததைப் பார்த்த செல்வா, பூட்டை உடைத்து உள்ளே சென்றார்.

ஜீவானந்தத்தின் வீட்டில் 3 பீரோக்கள் இருந்தன. இருட்டில் செல்வா பீரோவை திறந்து லாக்கரை உடைத்துள்ளார்.

அப்போது நகைகள் வைக்கும் பாக்ஸ்களில் நகைகள் இருந்தன. அதைப்பார்த்ததும் செல்வா சந்தோஷமடைந்து, நகைகளை பேக்கில் வைத்துக் கொண்டார்.

கொள்ளை நடந்த வீடு
கொள்ளை நடந்த வீடு

பிறகு அடுத்த பீரோவை திறந்தபோது அதில் பட்டுப்புடவைகள் இருந்துள்ளன. அப்போதுதான் செல்வாவுக்கு தன்னுடைய காதலியின் நினைவு வந்தது. பட்டுப்புடவைகளை காதலிக்கு பரிசாக கொடுத்து அசத்துலாம் என அதையும் எடுத்துக் கொண்டார்.

பின்னர் வெள்ளி பொருள்களையும் எடுத்துள்ளார். பீரோவில் 8,000 ரூபாய் பணம் இருந்துள்ளது. அதையும் எடுத்துக் கொண்டு செல்வா எஸ்கேப் ஆகியுள்ளார்.

கத்திரிக்கோல்

திருடிய பட்டுப்புடவைகளை செல்வா, தன்னுடைய காதலியைச் சந்தித்து கொடுத்துள்ளார். அப்போது காதலி, எல்லா பட்டுபுடவைகளும் சூப்பராக இருக்கிறது என்று கூறியுள்ளார். அதன்பிறகு நகைகளை விற்க செல்வா முடிவு செய்து அதை எடுத்துப் பார்த்துள்ளார்.

அப்போதுதான் அது அனைத்தும் கவரிங் நகைகள் என்று தெரிந்துள்ளது.

அதனால் இவ்வளவு கஷ்டப்பட்டு திருடியது கவரிங் நகைகளா என்று செல்வா மனவருத்தம் அடைந்துள்ளார்.

கொள்ளை நடந்த வீடு
கொள்ளை நடந்த வீடு

அதனால் ஆத்திரத்தில் அந்த நகைகளை தூக்கி எரிந்துவிட்டு வீட்டுக்கு வந்து தூங்கியுள்ளார். அப்போதுதான் போலீஸார் அவரை பிடித்துள்ளனர்.

செல்வாவின் கைரேகைகள் ஜீவானந்தத்தின் வீடுகளில் இருந்தன. ஆனால் அவைகள் தெளிவாக இல்லை. ஒவ்வொன்றாக கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தபோது கத்திரிக்கோலில் தெளிவாக கைரேகை இருந்தது.

அதன்மூலம்தான் செல்வா சிக்கிக் கொண்டார் என்கின்றனர் போலீஸார். போலீஸ் விசாரணையின்போது செல்வா, சார் நான் திருடியது கவரிங் நகைகள்தானே, என்னை மன்னித்து விட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

ஆனால் போலீஸரோ செல்வா மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஜீவானந்தம் வீட்டிலிருந்து செல்வா, 20 சவரன் கவரிங் நகைகளை திருடியுள்ளார். ஆனால் 100 சவரன் கவரிங் நகைகள் என்று தவறான தகவல்கள் வெளியாகிவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *