ஃபேஸ்புக் மூலம் பெண்களை சீட்டிங் செய்த பிசினஸ் மேக்னெட்

ஃபேஸ்புக் மூலம் பெண்களிடம் பழகும் இளைஞர் திலீப், வேலை வாங்கித் தருவதாகவும், பிசினஸ் செய்வதாகவும் கூறி லட்சக்கணக்கான ரூபாயை ஏமாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபோன் பிசினஸிக்காக 2.75 லட்சம் ரூபாயை வாங்கிய ஏமாற்றிய புகாரில் இளைஞர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொழிலதிபர்

சென்னை கீழ்ப்பாக்கம் பர்னபி சாலையைச் சேர்ந்தவர் பிரவீன் கடலோயா (49). தொழிலதிபரான இவர், கடந்த 30.7.2020-ல் வேப்பேரி காவல் நிலையத்தில் வேப்பேரியில் குடியிருக்கும் திலீப் என்ற இளைஞர் மீது புகாரளித்தார்.

புகாரின்பேரில் வேப்பேரி போலீஸார், திலீப்பிடம் விசாரிக்க முடிவு செய்தனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். அதனால் பிரவீன் புகாருக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், பிரவீன், சென்னை உயர்நீதிமன்றத்தில் திலீப் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடும்படி மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

இதையடுத்து வேப்பேரி போலீஸார், திலீப்பை தேடிவந்தனர். திலீப்பின் போன் நம்பரை வைத்து போலீஸார் விசாரித்தபோது அவர் வேப்பேரி வீட்டில் திலீப் இருக்கும் தகவல் கிடைத்தது.

உடனடியாக போலீஸார் அங்குச் சென்று திலீப்பை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தனர். பின்னர் அவரிடம் விசாரித்தபோது பணம் வாங்கியதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து திலீப்பை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் மூலம் நட்பு

கைதான திலீப், செல்போன் பிசினஸ் செய்து வருகிறார். மேலும் அவர் ஃபேஸ்புக்கில் ஆக்டிவ்வாகவும் இருந்துவருகிறார். வடமாநிலங்களைச் சேர்ந்த பெண்களுக்கு திலீப், ஃபேஸ்புக் மூலம் ப்ரெண்ட்ஸ் ரெக்கியூஸ்ட் கொடுப்பார். அதை ஏற்றுக்கொள்ளும் பெண்களிடம் அவர் முதலில் நட்பாக பழகுவார்.

அப்போது தன்னையும் வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் என்றும் பிசினஸ் மேக்னெட் என்றும் அறிமுகப்படுத்திக் கொள்வார்.

மேலும் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண்களின் வீட்டுக்குச் செல்லும் திலீப், அவர்களின் குடும்பத்தில் ஒருவராக சில காலங்களில் மாறிவிடுவார்.

அந்தளவுக்கு அவர் நெருங்கி பழகுவார். பிரவீனின் மனைவி ராக்கி என்பவருடன் முதலில் ஃபேஸ்புக் மூலம்தான் திலீப் பழகியுள்ளார். பின்னர் அவரின் வீட்டுக்குச் சென்று குடும்ப நண்பராகியுள்ளார். அதை பிரவீன் தன்னுடைய புகாரிலும் குறிப்பிட்டுள்ளார்.

பிரவீனிடம் கடந்த சில மாதங்களுக்கு முன், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐ போன் மற்றும் விலை உயர்ந்த செல்போன்கள் விலைக்கு வருகின்றன. அதை வாங்கி விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என திலீப், பிரவீனிடம் கூறியுள்ளார்.

திலீப்பின் பேச்சை நம்பி பிரவீனும் 2,75,000 ரூபாயை ஜனவரி மாதம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிக் கொண்ட பிறகு திலீப்பின் நடவடிக்கைகள் மாறத் தொடங்கின.

பிரவீனுடன் பேசுவதைத் தவிர்த்துவந்துள்ளார். மேலும் செல்பிசினஸிலும் பிரவீனுக்கு எந்தப்பணமும் கொடுக்கவில்லை. அதனால்தான் பிரவீன், காவல் நிலையத்தில் திலீப் மீது புகாரளித்துள்ளார்.

ஏர்ஹோஸ்டர்ஸ்கள்

பிரவீனைப் போல திலீப் வேறு சிலரையும் ஏமாற்றியதாக காவல் நிலையங்களில் புகாரளிக்கப்பட்டுள்ளன. ஜாம்பஜார் காவல் நிலையத்தில் கடந்த 2017-ம் ஆண்டு திலீப் மீது நகை திருட்டு புகாரளிக்கப்பட்டுள்ளது.

ஏர்ஹோஸ்டர் படிப்பை பயிலும் சில மாணவிகளுடன் திலீப்பிற்கு ஃபேஸ்புக் மூல் நட்பு கிடைத்துள்ளது. அதைப்பயன்படுத்தி பிரபலமான விமான நிறுவனத்தில் வேலைவாங்கித் தருவதாகத் திலீப் கூறி அந்த மாணவிகளை ஏமாற்றியுள்ளார்.

அதற்காக போலி ஆவணங்களை மாணவிகளிடம் கொடுத்துள்ளார். வேலைக்காக குறிப்பிட்ட தொகையையும் திலீப் வாங்கி ஏமாற்றியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மாதவரம் காவல் நிலையத்தில் 2019-ம் ஆண்டு வேலைவாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியதாக புகாரளிக்கப்பட்டது. அந்தப்புகாரின்பேரில் திலீப்பை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஜாமீனில் வெளியில் வந்த திலீப், மீண்டும் ஃபேஸ்புக் மூலம் பெண்களிடம் நட்பாக பழகி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டுவருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

பிரவீன் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், ஐபிசி 406, 420 ஆகிய பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ளார்.

திலீப் மீது மோசடி புகார்கள் காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதால் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *