திருடிய நகைகளை விற்று காதலிக்கு ஜிமிக்கி கம்மல் வாங்கி கொடுத்த திருடன்

சென்னையில் ஊரடங்கில் நகைகளைத் திருடி அதை விற்று காதலிக்கு ஜிமிக்கி கம்மல் வாங்கி கொடுத்த திருடன் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டார்.

சென்னை ஆயிரம் விளக்கு, பீட்டர்ஸ் சாலையில் குடியிருப்பவர் சையத் அபித்ரஸா. கடந்த 26.7.2020-ல் இவரின் வீட்டில் 5 சவரன் தங்க நகை திருட்டு போனது. இதுகுறித்து சையத் அபித்ரஸா அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

துணை கமிஷனர் தர்மராஜன், உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் சரவணன் மேற்பார்வையில் அண்ணாசாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் சப்-இன்ஸபெக்டர்கள் மூவேந்தன், ரங்கநாதன், காவலர்கள் பாலமுருகன், சாமி, மகேஸ்வரன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸார் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் செல்போனில் பேசியபடி நடந்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதனால் சம்பவம் நடந்தபோது அங்குள்ள டவரில் பதிவான செல்போன் சிக்னல் அடிப்படையில் போலீஸார் விசாரித்தனர்.

லிசாரணையில் திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பத்தைச் சேர்ந்த மேகநாதன் (32) எனத் தெரியவந்தது. இவர் திருடிய நகைகளை திநகரில் உள்ள நகைக்கடையில் விற்றது தெரியவந்தது. இதையடுத்து 5 சவரன் தங்க நகை மீட்கப்பட்டது. இவர் மீது அண்ணாசதுக்கம், தண்டையார் பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் குற்ற வழக்கில் நிலுவையில் உள்ளன.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், திருடிய நகைகளை மேகநாதன், விற்றுவிட்டு புதியதாக ஜிமிக்கி கம்மல் ஜோடியாக வாங்கியுள்ளார். அதை தன்னுடைய காதலிக்கு பரிசாக வாங்கி கொடுத்துள்ளார். மேகநாதனுக்கு திருமணமாகிவிட்டது. அவரின் மனைவி, குழந்தைகள் ஊரடங்கால் சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர். தனிமையில் இருந்த மேகநாதன், தன்னுடைய காதலிக்கு ஜிமிக்கி கம்மலை வாங்கி கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளார் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *