அரசு பேருந்தின் டிரைவருக்கு பளார்; மாணவர்களை கொத்தாக தூக்கிய போலீஸ்

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் பள்ளி மாணவர்கள், பேருந்தின் மேற்கூரையில் ஏறி பயணம் செய்ததைத் தட்டிக்கேட்ட டிரைவரின் கன்னத்தில் பளார் என அடித்த மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு பேருந்தில் ஒரே நேரத்தில் 40-க்கும் மேற்பட்டவர்கள் ஏற முயன்ற சம்பவமும் போலீஸாருக்கு தொல்லையாக மாறியுள்ளது.

சென்னை அண்ணாசதுக்கத்திலிருந்து பெரம்பூருக்கு அரசு பேருந்து வழித்தடம் எண் 27 ஏ 29-ம் தேதி சென்றது. இந்த பேருந்தை ஓட்டேரியை சேர்ந்த மோகனகிருஷ்ணன் என்பவர் ஓட்டினார். கீழ்ப்பாக்கம் தாசபிரகாஷ் என்ற பேருந்து நிறுத்தத்தில் சில பள்ளி மாணவர்கள், ஏறினர். அவர்களில் சில மாணவிகள் படிகட்டின் வழியாக ஜன்னலைப் பிடித்து பேருந்தின் மேற்கூரையின் ஏறினர். அதைக் கவனித்த டிரைவர் மோகனகிருஷ்ணன், மாணவர்களை கீழே இறங்கும்படிகூறினர். அப்போது, மாணவர்களுக்கும் டிரைவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த மாணவர்களில் ஒருவன் மோகனகிருஷ்ணனின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். அதனால் அதிர்ச்சியடைந்த மோகனகிருஷ்ணனுக்கு இன்னும் அதிர்ச்சி காத்திருந்தது. மாணவர்கள் கூட்டத்திலிருந்து வீசப்பட்ட கல் ஒன்று மோகனகிருஷ்ணனின் இடது தோளில் விழுந்தது. அதனால் நிலைகுலைந்த அவர், கீழே விழுந்தார். அதைப்பார்த்த பயணிகளும் கண்டக்டரும் மாணவர்களைப் பிடிக்க முயன்றனர். அவர்களையும் மாணவர்கள் கற்களால் தாக்கினர். இதையடுத்து காயமடைந்த டிரைவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

டிரைவர் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து அரசு பேருந்து டிரைவர்கள், கண்டக்டர்கள் பேருந்தை இயக்காமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இந்தத் தகவல் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு தெரிந்ததும் உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் இணை கமிஷனர் ராஜேந்திரன், துணை கமிஷனர் கார்த்திக்கேயன், உதவி கமிஷனர் ரமேஷ் தலைமையிலான போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்கள், கண்டக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு சிசிடிவி உதவியோடு பள்ளி மாணவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பயிலும் மாணவர்கள், தொடர்ந்து பொது மக்களுக்கு தொல்லைக் கொடுத்து வருகின்றனர். அவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து மாணவர்களை போலீஸார் எச்சரித்ததோடு அறிவுரைகளையும் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *