செல்போன் திருடனை தனியொருவனாகப் பிடித்த போலீஸ் எஸ்.ஐ – வைரலாகும் சிசிடிவி காட்சி

சென்னை மாதவரம் பகுதியில் செல்போனைப் பறித்துக் கொண்டு பைக்கில் அதிவேகமாகச் சென்ற செல்போன் திருடர்களை பைக்கிலேயே 3 கி.மீட்டர் தூரம் விரட்டிச் சென்று போலீஸ் எஸ்.ஐ ஆண்டலின் ரமேஷ் பிடித்தார்.

போலீஸ் எஸ்.ஐ-யை பாராட்டும் கமிஷனர்

செல்போன்

சென்னை மணலி புதுநகர் எம்எம்டிஏ காலனியைச் சேர்ந்தவர் ரவி (56). இவர் மாதவரம் மேம்பாலம் அருகில் பைக்கில் சென்றபோது பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள், கண்இமைக்கும் நேரத்தில் ரவியின் செல்போனை மின்னல் வேகத்தில் பறித்துக் கொண்டு சென்றனர். அதனால் அதிர்ச்சியடைந்த ரவி, திருடன் திருடன் என்று கூச்சலிட்டார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த மாதவரம் காவல் நிலைய எஸ்.ஐ ஆண்டலின் ரமேஷ், அடுத்த நிமிடமே செல்போன் திருடர்களை தன்னுடைய பைக்கில் விரட்டினார்.

மாதவரம் சாஸ்திரி நகர் மெயின் ரோட்டில் செல்போன் திருடர்களின் பைக்கை எஸ்.ஐ ஆண்டலின் ரமேஷ் மடக்கினார். அப்போது பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த இளைஞர் தப்பி ஓடிவிட்டார். ஆனால் பைக்கை ஓட்டிய இளைஞர், எஸ்.ஐ-யிடம் சிக்கிக் கொண்டார். இதையடுத்து அந்த இளைஞனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அப்போது அவரிடம் விசாரித்த போது வியாசர்பாடி சர்மா நகரைச் சேர்ந்த அருண்ராஜ் (20) எனத் தெரிந்தது.
அவர் அளித்த தகவலின்படி தப்பி ஓடியவர்மார்த்தூர் பகுதியைச் சேர்ந் நவீன்குமார் (23) எனத் தெரிந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள்

ஒரே நாளில் 4 பேர்

இதையடுத்து போலீஸார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 11 செல்போன்கள், ஒரு பைக் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். அருண்ராஜ், அவரின் கூட்டாளி நவீன்குமார் ஆகியோருடன் சேர்ந்து ராயபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் (19) என்பவரும் செல்போன் செயின் பறிப்பில் ஈடுபட்ட தகவல் போலீஸாருக்கு தெரிந்தது. இதையடுத்து மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர்.


கைதான அருண்ராஜ், நவீன்குமார் ஆகிய இருவரும் சேர்ந்து 27-ம் தேதி காலையில் வடக்கு கடற்கரை காவல் நிலைய எல்லைப்பகுதியிலும் ராயபுரம் காவல் எல்லைப் பகுதியிலும் மாதவரம் பகுதியில் 2 இடங்களிலும் என 4 பேர்களிடம் ஒரே நாளில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். அருண்ராஜ் மீது வழிப்பறி, செல்போன் பறிப்பு உள்ளிட்ட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

செல்போன் திருடன் அருண்ராஜை துணிச்சலாக தனியொருவனாக பைக்கில் சென்று விரட்டிப் பிடித்த எஸ்.ஐ- ஆண்டலின் ரமேஷை நேரில் அழைத்து சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டியுள்ளார். மேலும் போலீஸ் கமிஷனர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எஸ்.ஐ, செல்போன் திருடனை விரட்டிப்பிடிக்கும் சிசிடிவி கேமரா பதிவையும் பதிவு செய்துள்ளார்.

திருட்டு பைக்

3 கி.மீட்டர் தூரம்

இதுகுறித்து எஸ்.ஐ ஆண்டலின் ரமேஷ் கூறுகையில், “சம்பவத்தன்று பைக்கில் நான் சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் இரண்டு இளைஞர்கள் வேகமாக சென்றனர். அவர்களைப் பார்த்ததும் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அப்போது இளைஞர்கள் சென்ற பைக்கின் பின்னால் வந்த ஒருவர், என்னுடைய செல்போனை திருடிக் கொண்டு செல்கிறார்கள் என்று கூறியப்படி அவர்களை விரட்டினார். உடனே நான் என்னுடைய பைக்கில் இளைஞர்களை விரட்டிச் சென்றேன்.

அதனால் இளைஞர்கள் வேகமாக பைக்கை ஓட்டினார்கள். நானும் விடாமல் 3 கி.மீட்டர் தூரம் அவர்களை விரட்டினேன். அப்போது இளைஞர்கள் சென்ற பைக்கின் மீது என் பைக்கை மோதினேன். உடனே பின்னால் அமர்ந்திருந்த இளைஞன் பைக்கிலிருந்து தப்பி ஓடினான். பைக்கை ஓட்டியவனின் சட்டையைப் பிடித்தேன். ஆனால் அவன் என்னிடமிருந்து தப்பிக்க வேகமாக பைக்கை ஓட்டினான். நானும் என்னுடைய பிடியை விடாமல் பின்னால் ஓடினேன். ஒருகட்டத்தில் கீழே விழுந்தபோது அவனும் பைக்கிலிருந்து விழுந்தான்.

அருண்

திருட்டு பைக்

இதையடுத்து அவனை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தேன். விசாரணையின் அவனின் பெயர் அருண் எனத் தெரிந்தது. அவன் மீது செல்போன் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பைக்கிலிருந்து தப்பியவன் நவீன்குமார், கல்லூரி ஒன்றில் படித்துவருகிறான். இவர்களின் கூட்டாளி விக்னேஷ். மூன்று பேரும் லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.

செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபடும் இவர்கள் சிசிடிவி மூலம் தங்களைக் கண்டுபிடிக்காமலிருக்க லாட்ஜில் சில நாள்கள் தங்கிவிட்டு பின்னர் அதை காலி செய்துவிட்டு தலைமறைவாகுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். திருடிய செல்போன்களை நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு விற்றுவிட்டு அந்தப்பணத்தில் ஜாலியாக வாழ்ந்து வந்தனர். செல்போன் திருடர்கள் ஓட்டி வந்தது திருட்டு பைக் எனத் தெரியவந்துள்ளது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *