விஷ்வ இந்து பரிஷத் அலுவலகத்தில் எஸ்எஸ்.ஐ தற்கொலை ஏன்?-திநகர் அதிர்ச்சி

சென்னை திநகர் விஷ்வ இந்து பரிஷத் அலுவலக பாதுகாப்பு பணியிலிருந்த சிறப்பு எஸ்ஐ சேகர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.

சென்னை மதுரவாயல் எம்.எம்.டி.ஏ காலனியில் குடியிருப்பவர் சேகர் (47). இவர் ஆயுதப்படையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு திநகர் ராமானுஜம் தெருவில் செயல்படும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாநில தலைமை அலுவலகத்தில் தலைவர் வேதாந்தம் என்பவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றினார். கடந்த 2 ஆண்டுகளாக பணியிலிருந்த இவர், காலையில் பணிக்கு வந்து விட்டு இரவில்தான் வீட்டுக்கு செல்வது வழக்கம்.

விஷ்வ இந்து பரிஷத் அலுவலகத்தின் பின்புறத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் தங்குவதற்கென்று தனி அறை உள்ளது. அங்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகர், இன்று ஓய்வெடுத்துள்ளார். அப்போது, மாலை சுமார் 5 மணியளவில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அங்கிருந்த அலுவலக ஊழியர்கள் ஓடிவந்தனர். அப்போது பாதுகாப்பு அதிகாரி சேகர், ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

எஸ்.எஸ்.ஐ சேகர்
எஸ்.எஸ்.ஐ சேகர்

அவரின் கையில் துப்பாக்கி இருந்தது. இந்தச் சம்பவம் குறித்து மாம்பலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தி.நகர் துணைகமிஷனர் ஹரிகிரன் பிரசாத், மாம்பலம் உதவிகமிஷனர் கலியன் மற்றும் மாம்பலம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

பின்னர் சேகரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
சம்பவ இடத்தில் போலீஸார் ஆய்வு செய்தபோது, எஸ்ஐ சேகரின் சடலத்தின் அருகில் கிடந்த பிஸ்டல் ரக துப்பாக்கியை கைப்பற்றினர். தடயஅறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து முக்கிய தடயங்களை சேகரித்தனர்.

அப்போது அங்கு எஸ்ஐ சேகர் தற்கொலை செய்வதற்கு முன் எழுதிய கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அதில் வீடு கட்டுவதற்காக 25 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் போய்விடுமோ என மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் எழுதப்பட்டிருந்தது. எஸ்ஐ தற்கொலை சம்பவம் தொடர்பாக மாம்பலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட சிறப்பு எஸ்ஐ சேகரின் சொந்த ஊர் வேலுார் மாவட்டம், காட்பாடி, வண்டாரதுங்கல் கிராமம். கடந்த 1994-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் காவலராக பணியில் சேர்ந்த இவர் 2007-ல் சிறப்பு எஸ்ஐயாக பதவி உயர்வு பெற்றுள்ளார். 2009-ல் எஸ்.ஐயாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், வசந்த் (13) என்ற மகனும், வாணிஸ்ரீ (14) என்ற மகளும் உள்ளனர்.

சேகரின் தற்கொலை சம்பவம் சக காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே அயனாவரம் காவல் நிலையத்தில் எஸ்.ஐ சதீஷ்குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். காவலர்களின் மனஅழுத்தத்தைக் குறைக்க யோகா பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. அதற்கு பிறகும் இதுபோன்ற சம்பவங்கள் காவல்துறையை கதிகலங்கவைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *