ஜிஹெச் மொட்டை மாடியில் பேராசிரியரின் மனைவி சடலம் – கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் உயிரிழந்த மர்மம்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பேராசிரியரின் மனைவி, மொட்டை மாடியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் மௌலி. 48 வயதான இவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி சுனிதா. 42 வயதான இவரும், மௌலியும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர். அதனால் இருவரும் கொரோனா பரிசோதனை செய்தபோது பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தது. அதனால் கடந்த 21.5.2021-ம் தேதி இருவரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தனர்.

கொரோனா வார்டு

சுனிதாவின் உடல்நலம் மோசமாக இருந்ததால் அவரை மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்தனர். மௌலியை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு டாக்டர்கள் அறிவுரை வழங்கினர். இதையடுத் சுனிதா, சென்னை அரசு மருத்துவமனையின் டவர் 3-ல் மூன்றாவது தளத்தில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்தநிலையில் சுனிதாவைக் காணவில்லை என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார், மௌலிக்கு போன் செய்து விவரத்தைக் கூறினர்.

அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மௌலி, மருத்துவமனைக்கு வந்து மனைவி சுனிதாவை வார்டு முழுவதும் தேடினார். ஆனால் அவர் அங்கு இல்லை. உறவினர்களுக்கு போன் செய்து விவரத்தைக் கூறி சுனிதா குறித்து விசாரித்தார். அங்கும் அவர் செல்லவில்லை. கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சுனிதா எங்குச் சென்றார் என்ற விவரம் தெரியாமல் மனவேதனையோடு மனைவியை மௌலி தேடிவந்தார்.

சடலம்

இந்தச் சூழலில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் டவர் 3-ல் உளள மொட்டை மாடியிலிருந்து தூர்நாற்றம் வந்தது. உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் அங்குச் சென்று பார்த்தபோது இளம்பெண்ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டது. அதுகுறித் மௌலிக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு வந்த மௌலிக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண், சுனிதா என மௌலி அடையாளம் காட்டினார்.

இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் சுனிதா மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பேராசிரியரின் மனைவி சுனிதா எப்படி உயிரிழந்தார் என போலீஸார் விசாரித்து வருகின்றனர். கொரோனா சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்புவார் என காத்திருந்த பேராசிரியர் மௌலியையம் அவரின் குடும்பத்தினரையும் சுனிதாவின் மரணம் நிலைகுலைய வைத்திருக்கிறது. அரசு மருத்துவமனை மொட்டை மாடியில் சுனிதா, உயிரிழந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. சுனிதா எப்படி உயிரிழந்தார் என்பது பிரேத பரிசோதனையில் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *