ரயில் பயணி வயிற்றில் கட்டிவைத்திருந்த ரூ.28 லட்சம் – சென்னையில் சிக்கிய ருசிகரம்

ஐதராபாத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த இளைஞர் ஒருவர், தன்னுடைய வயிற்றில் 28 லட்சம் ரூபாயை கட்டி மறைத்துக் கொண்டு வந்ததை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் கண்டுபிடித்ததோடு பணத்தை வருமானவரித்துறையினரிடம் ஒப்படைத்திருக்கின்றனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு இன்று ஹைதராபாத்திலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில் பிளாட்பாரம் 3-க்கு அதிகாலையில் வந்தது. அதில் எஸ். 1 என்ற ரயில் பெட்டியிலிருந்து இறங்கிய ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த பயணி சந்திரசேகர் என்பவர், பிளாட்பாரத்தில் நடந்து வந்தார். அப்போது ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சிவநேசன் தலைமையிலான போலீஸார் மதுபாட்டில்களை யாராவது கடத்தி வருகிறார்களா என கண்காணித்துக் கொண்டிருந்தனர். ஒல்லியான தேகம் கொண்ட சந்திரசேகரின் வயிற்று பகுதி மட்டும் பெரிதாக இருந்ததைக் கவனித்த போலீஸார் அவரிடம் ஏன் வயிறு இப்படி இருக்கிறது என விசாரித்தனர். அதற்கு அவர், தொப்பை சார் எனக்கூறி அங்கிருந்து எஸ்கேப் ஆக முயன்றார். தொப்பையா என கேட்டப்படியே சட்டையைக் கழற்றும்படி போலீஸார் கூறியிருக்கின்றனர். அதன்பிறகுதான் சந்திரசேகர் சட்டையைக் கழற்றி காண்பித்தபோது வயிற்றை சுற்றி பெல்ட் போல ஒரு துணிப்பையை அவர் கட்டியிருந்தார். அதற்குள் 28 லட்சம் ரூபாய் இருந்தது. அதற்கான ஆவணங்கள் இல்லாததால் சந்திரசேகரும் அவர் கொண்டு வந்த பணத்தையும் வருமான வரித்துறையினரிடம் இன்ஸ்பெக்டர் சிவநேசன் ஒப்படைத்திருக்கிறார்.

இளைஞர் சந்திரசேகர்
ரூ.28 லட்சத்தை மறைத்து வைத்த இளைஞர் சந்திரசேகர்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த இளைஞர் சந்திரசேகரின் வயிறு பெரிதாக இருந்ததைப் பார்த்ததும் கொரோனா ஊரடங்கில் அவர் மதுபாட்டில்களை கடத்தி வருகிறார் என்ற சந்தேகத்தின்பேரில் விசாரித்தோம். அப்போது அவர், மதுபாட்டில்கள் இல்லை சார், என்னுடைய வயிறே அப்படிதான் இருக்கும் என கூலாக கூறினார். சந்தேகமடைந்த நாங்கள் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்ததோடு சோதனை செய்தோம்.

அப்போது சட்டை மற்றும் கோர்ட்டை கழற்றிய அவர், வயிற்று பகுதியில் பெல்ட் போல துணிப்பை ஒன்றை கழற்றினார். அதற்குள் இருந்து 2000 ரூபாய் நோட்டுக்களை எடுத்து மேஜையில் வைத்தார். அடுத்து அவர் அணி்ந்திருந்த கோர்ட்டிலிருந்தும் பணத்தை எடுத்தார். அதை எண்ணியபோது 28 லட்சம் ரூபாய் இருந்தது. அதற்கான ஆவணங்களை சந்திரசேகரிடம் கேட்டபோது அவர், தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். மேலும், தான் ஆந்திராவில் உள்ள ஒரு நகைக்கடையில் பி.காம் படித்துக் கொண்டே வேலைப்பார்த்து வருகிறேன். நகைக்கடை ஓனர்தான் இந்தப் பணத்தை என்னிடம் கொடுத்தார். சென்னையில் குமார் ஒருவரிடம் அதை கொடுக்கும்படி கூறினார் என்று மட்டும் பதிலளித்தார். அதனால்தான் சந்திரசேகரையும் அவர் கொண்டு வந்த பணத்தையும் ஐடி-டிப்பார்மெண்ட்டில் ஒப்படைத்திருக்கிறோம்” என்றனர்.

எப்படியெல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறார்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *