ஒரு பேக்; ஒரு பேப்பர் பார்சல்; அதற்குள் ரூ.35 லட்சங்கள் – சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிக்கிய இளைஞர்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு இன்று காலை வந்த எக்ஸ்பிரஸில் பயணித்த இளைஞர் ஒருவரிடமிருந்து 35 லட்சம் ரூபாயை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர். இது இந்த வாரத்தில் இரண்டாவது சம்பவம்.

சென்னை, திருச்சி விமான நிலையங்களில்தான் டன் கணக்கில் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்வது வாடிக்கையாக உள்ளது. தங்கக் கடத்தல் தொடர்கதையாகிவருகிறது. தற்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் எக்ஸ்பிரஸ்களிலும் லட்சகணக்கான ரூபாயுடன் ஆந்திர மாநில இளைஞர்கள் சிக்குவது தொடர்கதையாகிவருகிறது. அதுகுறித்த செய்தி தொகுப்பை விரிவாக இங்கு பார்ப்போம்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பணத்துடன் பிடிப்பட்ட இளைஞர் சுப்பராவ்

கொரோனா ஊரடங்கையொட்டி கர்நாடகா, ஆந்திர மாநிலங்களிலிருந்து வரும் ரயில்களில் தினமும் மதுபாட்டில்கள் சென்னைக்கு கடத்தப்பட்டு வருகின்றன. அதைக் கண்காணிக்க முதன்மை கோட்ட பாதுகாப்பு கமிஷனர் செந்தில் உத்தரவிட்டார். அதன்பேரில் சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சிவநேசன் தலைமையிலான போலீஸார் கண்கணித்து வருகின்றனர். இன்று காலை (4.6.2021) ஐதராபாத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. உளவுத்துறை உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஆஞ்சேயன், தலைமைக் காவலர்கள் ராஜேந்திரன், சிவக்குமார் ஆகியோர் பிளாட்பாரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியான எஸ்.10, சீட் நம்பர் 63-ல் பயணித்த இளைஞர் பஞ்சுமர்த்தி சுப்பராவ் (35) என்பவர், பிரவுன் நிற டிராவல் பேக்குடன் பிளாட்பாரத்தில் நடந்து வந்தார். அவரை சந்தேகத்தின் பேரில் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார்.

இதையடுத்து காவல் நிலையத்துக்கு அழைத்துவந்த போலீஸார் இன்ஸ்பெக்டர் சிவநேசன் முன்னிலையில் டிராவல் பேக்கை திறந்து பார்த்தனர். அப்போது பேக்குகள் பெரிய பேப்பர் பண்டல் ஒன்று இருந்தது. அதை சுப்பராவ், ஓப்பன் செய்தார். அதற்குள் 500, 200 ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக இருந்தன. அதை வெளியில் எடுத்து போலீஸார் எண்ணிப்பார்த்தபோது 35 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் இருந்தது.

பணம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவநேசன், இளைஞர் சுப்பராவ்விடம் விசாரித்தனர். அதற்கு சுப்பராவ் பணம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது. சென்னையில் ஒருவரிடம் ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் கொடுக்கக் கூறினார். பணத்தைக் கொடுத்தால் ஆந்திராவுக்கு திரும்பிச் செல்ல ரிட்டன் டிக்கெட்வுடன் கமிஷன் பணத்தை கொடுப்பார்கள் என்று தெரிவித்தார். இதையடுத்து பணத்தையும் சுப்பராவ்வையும் வருமானவரித்துறையினரிடம் இன்ஸ்பெக்டர் சிவநேசன் ஒப்படைத்தனர்.

இளைஞர் சந்திரசேகர்
ரூ.28 லட்சத்தை மறைத்து வைத்த இளைஞர் சந்திரசேகர்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கடந்த 1-ம் தேதி ஐதராபாத்திலிருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு ரயில் பெட்டியில் பயணித்த சந்திரசேகர் என்ற இளைஞரிடம் இருந்து 28 லட்சம் ரூபாயை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் பறிமுதல் செய்தனர். சந்திரசேகர், தன்னுடைய இடுப்பில் வைத்து பணத்தைக் கடத்தி வந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். அவரையும் பணத்தையும் வருமானவரித்துறை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் நடந்து 4 நாள்களுக்குள் அதே ரயிலில் பயணித்த சுப்பராவ், 35 லட்சத்துடன் சிக்கியிருக்கிறார். தொடர்ந்து சென்னைக்கு வரும் ரயிலில் லட்சக்கணக்கில் பணத்துடன் ஆந்திர மாநில இளைஞர்கள் சிக்குவது ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *