சென்னை ஆவடி மகளிர் போலீசார் கைது செய்த ரவுடி முரளி மீது ஏற்கெனவே கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு உள்ளது. தற்போது, கணவரைப் பிரிந்த பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்த முரளி, அந்தப் பெண்ணின் மகள்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திருநின்றவூர், கம்பர் தெருவில் குடியிருந்து வருபவர் சாந்தி (பெயர் மாற்றம்). இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளார். சாந்தி, கடந்த சில தினங்களுக்கு முன் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன்னுடைய கணவர் முரளி (36) மீது பரபரப்பான குற்றச்சாட்டை கூறி புகார் ஒன்றை கொடுத்திருந்தார்.

அதில் `என்னுடைய 2 மகள்களுக்கும் வயது 16, 13 ஆகுகிறது. நான் சமையல் வேலைக்கு வெளியில் சென்றுவிடுவேன். அதனால் வீட்டில் என் மகள்கள் தனியாக இருப்பார்கள். கடந்த சில ஆண்டுகளாக முரளி என்பவருடன் நான் வாழ்ந்து வருகிறேன். அவரும் என் வீட்டில்தான் தங்கியுள்ளார்.
நான் வீட்டில் இல்லாத நேரத்தில் என் மகள்களுக்கு முரளி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். எனவே முரளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
புகாரின் அடிப்படையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி, சம்பந்தப்பட்ட முரளி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனால் ஆவடி அனைத்த மகளிர் போலீசார், சாந்தியின் மகள்களிடம் முதலில் விசாரித்தனர். அப்போது முரளி, தங்களுக்கு கேட்டதை வாங்கிக் கொடுத்து தவறாக நடந்துக் கொண்டதை இருவரும் கூறினர்.
அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், முரளியிடம் விசாரித்தனர். அப்போது அவரும் குற்றத்தை ஒத்துக் கொண்டார். இதையடுத்து முரளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முரளி குறித்து விசாரித்தபோது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “சாந்தி, கணவரைப்பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். அவருக்கும் ரவுடி முரளிக்கும் காதல் மலர்ந்து இருவரும் ஒரே வீட்டில் கணவன் மனைவி போல வாழ்ந்துவருகின்றனர்.
சாந்தியின் முதல் கணவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஆரம்பத்தில் அவர்களை பாட்டி வீட்டில் விட்டுள்ளார் சாந்தி. ஆனால் பாட்டி வீட்டில் வளர விரும்பாத குழந்தைகள் மீண்டும் சாந்தியின் வீட்டுக்கு வந்துள்ளனர். அதனால் அனைவரும் ஒரே வீட்டில் குடியிருந்துள்ளனர்.
ஊடங்கு நேரம் என்பதால் சாந்திக்கு வேலை இல்லை. அதனால் அவரும் வீட்டில் இருந்துள்ளார். இந்தச் சமயத்தில் தன்னுடைய மகள்களின் நடவடிக்கைகளில் சாந்திக்கு மாற்றம் தெரிந்துள்ளது. அதை ரகசியமாக கவனித்த சாந்திக்கு முரளியின் சுயரூபம் தெரியவந்துள்ளது. அதனால் அதிர்ச்சியடைந்த சாந்தி, தன்னுடைய மகளுக்கு புத்திமதி கூறியதோடு முரளி குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
சாந்தியின் மகள்களிடம் விசாரித்த போது அம்மா வேலைக்குச் சென்ற பிறகு முரளி, 2 சிறுமிகளுக்கு பிடித்த உணவை வாங்கி கொடுத்து அவர்களை தன்னுடைய பாலியல் இச்சைக்கு பலியாக்கி வந்துள்ளார்.
ஒரு சிறுமிக்கு ஃபைரடு ரைஸ் என்றால் ரொம்ப பிடிக்கும். அதனால் அதை வாங்கி கொடுத்துள்ளார். அப்போது சிறுமியிடம் ஆசைவார்த்தைகளைக் கூறி அவளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்துள்ளார்.

அதைப்போல இன்னெரு சிறுமிக்கு சாக்லேட் பிடிக்கும் என்பதால் அவளுக்கும் அதை வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்துவந்துள்ளார். இது நீண்ட காலமாக தொடர்ந்துள்ளது. அம்மாவிடம் இந்த விஷயத்தைக் கூறினால் அனைவரையும் கொலை செய்துவிடுவேன் என்று சிறுமிகளை முரளி மிரட்டிவைத்துள்ளார். அதற்கு பயந்து சிறுமிகளும் எதுவும் சொல்லவில்லை.
முரளி மீது தண்டையார் பேட்டை காவல் நிலையத்தில் இரட்டை கொலை வழக்கும், திருவள்ளூர் மகளிர் காவல் நிலையத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கும், திருநின்றவூர் காவல்நிலையத்தில் அடி, தடி வழக்கும் நிலுவையில் உள்ளன. மேலும் இவர் திருநின்றவூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதால் முரளியை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்
பெற்ற மகளான 16 வயது சிறுமிக்கும் முரளி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் விசாரணையில் தெரியவந்தது. பெற்ற மகள், காதலியின் மகள் என சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முரளி, சிறைக்கு சென்றபிறகும் திருந்தவில்லை என்று கூறுகின்றனர் போலீசார்.