சென்னை: சிறுமியுடன் 3 ஆண்டுகள் குடும்பம் நடத்திய ரவுடி

மதுரையிலிருந்து மூன்றாண்டுகளுக்கு முன் கடத்தி வரப்பட்ட சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்த ரவுடியையும் அவனின் தாயையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர்.

ரவுடி தேசப்பன்

சென்னை காசிமேடு காசிபுரத்தைச் சேர்ந்தவர் லோகேஷ் என்கிற தேசப்பன் (21). இவன் மீது 2 கொலை வழக்குகள், கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் வெளியூருக்குச் சென்ற தேசப்பன், சிறுமி ஒருவரை வீட்டுக்கு அழைத்து வந்தார். அந்தச் சிறுமியும் தேசப்பனின் அம்மா கீதா, தேசப்பன் ஆகியோர் ஒரே வீட்டில் தங்கியிருந்தனர்.

சிறுமி வீட்டை விட்டு வெளியில் யாரிடமும் பேச தேசப்பனும் கீதாவும் அனுமதிப்பதில்லை. வீட்டுக்குள்ளே கடந்த 3 ஆண்டுகளாக சிறுமி இருந்தார். அதனால் அந்தப்பகுதியில் உள்ளவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சிறுமி குறித்து ரகசியமாக அந்தப்பகுதியில் உள்ளவர்கள் விசாரித்தனர். அப்போது சிறுமியின் சொந்த ஊர் மதுரை என்றும் அவளுக்கு 14 வயதாகுவதும் தெரியவந்தது. சிறுமியைத் திருமணம் செய்து தேசப்பன் குடும்பம் நடத்தி வருவரும் தெரிந்தது.

சிறுமி

இதையடுத்து தேசப்பனின் தெருவைச் சேர்ந்தவர்கள் குழந்தைகள் நல அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் குழந்தைகள் நல அலுவலர்கள் தேசப்பனின் வீட்டுக்குச் சென்று விசாரித்தனர். சிறுமியிடம் விசாரித்தபோது அவள் உண்மையைக் கூறினாள். அதனால் சிறுமியை மீட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் இதுதொடர்பாக ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் நல அலுவலர் புகாரளித்தார். அதன்பேரில் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்த போலீஸார் தேசப்பனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ரவுடி, அவனின் அம்மா கைது

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “ரவுடியான தேசப்பன், சபரிமலைக்குச் செல்வார். அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள கடைக்குச் சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த 14 வயது சிறுமியுடன் தேசப்பனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் செல்போன் மூலம் பேசி வந்தனர். தேசப்பனும் சிறுமியும் காதலித்திருக்கின்றனர்.

சிறுமியைத் திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி சென்னைக்கு தேசப்பன் அழைத்து வந்து இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையில் தேசப்பனுடன் குடும்பம் சிறுமி நடத்தி வந்திருக்கிறாள். அதற்கு தேசப்பனின் அம்மா கீதாவும் உடந்தையாக இருந்ததால் அவரையும் கைது செய்திருக்கிறோம்” என்றனர்.

சிறுமியைக் கடத்தி வந்து அவளுடன் ரவுடி தேசப்பன் குடும்பம் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *