சென்னையில் தங்கையை பெண் கேட்ட ரவுடியை அண்ணன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரவுடி மணிகண்டன்
சென்னை ஆதம்பாக்கம், ஆபீஸர்ஸ் காலனி 5-வது தெருவைச் சேர்ந்தவர் அப்பு என்கிற மணிகண்டன் (34). இவர் மீது 2010-ல் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவரின் மாமா குட்டான் என்கிற ஆபிரகாம். இவருக்கும் இவரின் உறவினர்களுக்கும் சொத்து தகராறு இருந்து வருகிறது.
சொத்துப்பிரச்னையில் மணிகண்டன் உறவினர்களைத் தூண்டிவிடுவதாக ஆபிரகாம் குடும்பத்தினருக்கு சந்தேகம் இருந்தது. இந்தநிலையில் மணிகண்டனுக்கு திருமணமாகி அவரின் மனைவி விவாகரத்து பெற்று பிரிந்து சென்றுவிட்டார். அதனால் மணிகண்டனுக்கு பெண் பார்த்துவந்தனர்.

ஆபிரகாமின் மகளை 2-வதாக திருமணம் செய்ய மணிகண்டன் ஆசைப்பட்டுள்ளார். அதனால் பெண் கேட்க ஆபிரகாமின் மகன் கார்க் என்கிற எட்வின் வீட்டுக்கு மணிகண்டன் சென்றுள்ளார். அப்போது, எட்வின் மது அருந்திக் கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து மணிகண்டனும் மது அருந்தினார். போதையிலிருந்த மணிகண்டன், உன் தங்கையை எனக்கு திருமணம் செய்து கொடு என்று எட்வினிடம் கேட்டுள்ளார்.
ஒரே கல்லில் 2 மாங்காய்
அதற்கு எட்வின் எந்தப்பதிலும் சொல்லவில்லை. பின்னர் எட்வின் வீட்டிலேயே மணிகண்டன் தூங்கினார். இந்தச் சமயத்தில் மணிகண்டனுக்கு தன்னுடைய தங்கையை திருமணம் செய்து கொடுக்க மனம் இல்லை. அதை மணிகண்டனிடம் வெளிப்படையாக சொல்லவும் எட்வின் தயங்கினார்.
அதனால் இரவு முழுவதும் தூங்காமல் என்ன செய்யலாம் என்று எட்வின் யோசித்தார். அப்போது மணிகண்டனைக் கொலை செய்துவிட்டால் ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடிக்கலாம் என எட்வின் திட்டமிட்டுள்ளார். ஒன்று சொத்து பிரச்னை, இன்னொன்று தங்கையின் திருமணம். இரண்டுக்கும் முற்றுப்புள்ளி வைக்க மணிகண்டனை கொலை செய்வது தொடர்பாக எட்வின் யோசித்துள்ளார்.

அப்போது அவருக்கு ஒரு ஐடியா தோன்றியுள்ளது. போதையிலிருக்கும் மணிகண்டனை எளிதாக கொலை செய்துவிடலாம் என்று திட்டம் போட்ட எட்வின், அம்மி கல்லை எடுத்து வந்துள்ளார். அதை மணிகண்டனின் தலையில் போட்டுள்ளார். அதில் மணிகண்டனின் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
போலீஸிடம் சிக்காமலிருக்க அதிகாலையில் வீட்டை விட்டு வெளியேறிய எட்வின் தலைமறைவாகிவிட்டார். இந்தச் சமயத்தில் எட்வின் வீட்டுக்கு அக்கம் பக்கத்தினர் வந்தபோது மணிகண்டன் இறந்துகிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
கொலை
பின்னர் மணிகண்டன் கொலை செய்யப்பட்டு கிடந்த தகவலை ஆதம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையிலான போலீசார், எட்வின் வீட்டுக்கு வந்தனர். அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்த மணிகண்டனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் நடத்திய விசாரணையில் மணிகண்டனை கொலை செய்தது எட்வின் எனத் தெரியவந்தது.
அதனால் அவரை போலீசார் தேடிவந்தனர். எட்வின் தலைமறைவாக இருக்கும் இடம் போலீசாருக்கு கிடைத்ததும் அங்குச் சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரித்தபோது தங்கையை மணிகண்டனுக்கு திருமணம் செய்து கொடுக்க எட்வின் விரும்பவில்லை. அதனால் அவரைக் கொலை செய்தததாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து எட்வினை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர். கைதான எட்வின் பிளம்பராக வேலைபார்த்து வருகிறார்.