பிரபல ரவுடி என்கவுன்டர் – யார் இந்த இளநீர் சங்கர்?

சென்னையில் இன்று அதிகாலை பிரபல ரவுடி இளநீர் சங்கர் போலீஸாரின் துப்பாக்கி குண்டுகள் துளைத்து உயிரிழந்தார். இந்த என்கவுன்டர் சம்பவம் ரவுடிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரவுடி சங்கர்

சென்னை அயனாவரம், கே.கே.நகரைச் சேர்ந்தவர் சங்கர் (48). இவர் மீது 3 கொலை வழக்குள், 4 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 51 வழக்குகள் உள்ளன.

பிரபல ரவுடியான சங்கரை அயனாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை போலீஸார் கஞ்சா வழக்கில் தேடிவந்தனர்.

நீலாங்கரை பகுதியில் சங்கர் தலைமறைவாக இருக்கும் தகவல் கிடைத்ததும் போலீஸார் அங்குச் சென்று அவரைப்பிடித்தனர். பின்னர் ஆவடி நியூ ரோடு, அண்ணாநகர் ஆர்.டிஓ அலுவலகம் எதிரில் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக ரவுடி சங்கர் போலீஸாரிடம் கூறினார்.

என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி இளநீர் சங்கர்
என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி இளநீர் சங்கர்

கஞ்சா

இதையடுத்து அவரை அழைத்துக் கொண்டு போலீஸார் ஆவடி நியூ ரோடு பகுதிக்குச் சென்றனர். அங்கு முட்புதரில் கஞ்சா இருப்பதாகக் கூறி ரவுடி சங்கர் அதை எடுத்துவரும்படி கூறினார். அப்போது அவருடன் காவலர் முபராக் சென்றார்.

கஞ்சா எடுப்பதாகக் கூறிய ரவுடி சங்கர், திடீரென அரிவாளை எடுத்து காவலர் முபராக்கை வெட்டினார். அதனால் அவர் கீழே விழுந்தார். முபராக்கின் அலறல் சத்தம் கேட்ட இன்ஸ்பெக்டர் நடராஜ் மற்றும் போலீஸார் ரவுடி சங்கரைப் பிடிக்க முயன்றனர்.

சரண் அடையும்படி இன்ஸ்பெக்டர் நடராஜன் துப்பாக்கி முனையில் கூறினார். ஆனால் அதை காதில் வாங்கிக் கொள்ளாத ரவுடி சங்கர், அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். மேலும் அரிவாளைக் கொண்டு போலீஸாரை மிரட்டினார்.

3 குண்டுகள்

நிலைமை விபரீதமாகுவதை உணர்ந்த இன்ஸ்பெக்டர் நடராஜ், தற்காப்புக்காக துப்பாக்கியால் சங்கரை நோக்கி சுட்டார். இதில் வயிற்று மேல்பகுதியில் 3 குண்டுகள் பாய்ந்ததில் ரவுடி சங்கர் சுருண்டு விழுந்தார்.

என்கவுன்டர் நடந்த இடம்
என்கவுன்டர் நடந்த இடம்

அதன்பிறகு 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கரை போலீஸார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த காவலர் முபராக், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிவல் சிகிச்சை பெற்றுவருகிறார்.

அவரை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், கஞ்சா வழக்கில் ரவுடி சங்கரை போலீஸார் தேடிவந்தனர்.

அவரை சம்பவ இடத்தில் பிடித்த போது அரிவாளால் காவலர் முபராக்கை சங்கர் வெட்டியுள்ளார்.

என்கவுன்டர் நடந்த இடம்
என்கவுன்டர் நடந்த இடம்

3 கொலை

அதனால்தான் இன்ஸ்பெக்டர் நடராஜ், முதலில் எச்சரிக்கைவிடுத்துள்ளார். பின்னர் தற்காப்புக்காக சங்கரை சுட்டுள்ளார். அதில் அவர் உயிரிழந்துள்ளார்.

தேசிய மனித உரிமை ஆணையம், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இந்த வழக்கு விசாரிக்கப்படும். மாஜிஸ்திரேட் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ரவுடி சங்கர் மீது 3 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 51 வழக்குகள் உள்ளன. இவர் 9 தடவை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.

சம்பவம் நடந்த இடத்துக்கு கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் சுதாகர், துணை கமிஷனர் மனோகரன் ஆகியோர் சென்று ஆய்வு நடத்தினர். சம்பவ இடத்தில் அரிவாள் ஒன்று கிடந்தது.

நீண்ட நாளுக்குப்பிறகு சென்னையில் என்கவுன்டர் நடந்துள்ள நிலையில், சம்பவ இடத்தில் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி இளநீர் சங்கர்
என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி இளநீர் சங்கர்

யார் இந்த ரவுடி சங்கர்?

ரவுடி சங்கரின் அம்மா இளநீர் வியாபாரம் செய்து வந்தார். அதனால் சங்கரின் பெயரோடு இளநீர் சங்கர் என்ற அடைமொழி சேர்ந்தது.

ஆனால் காவல்துறை சரித்திர குற்ற பதிவேட்டில் அயனாவரம் சங்கர் என்று பெயர் பதிவு செய்யப்பட்டது.

ஏனெனில் சங்கர் என்ற பெயரில் ஏராளமான ரவுடிகள் உள்ளனர். சங்கருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

அடிதடி, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சங்கர் மீது அயனாவரம் காவல் நிலையத்தில் அடுத்தடுத்து வழக்குகள் 1996-ம் ஆண்டு முதல் பதிவாகின.

2010-ம் ஆண்டு கொலை வழக்கு, 2013-ல் அடுத்த கொலை வழக்கு, 2017-ல் திருமுல்லைவாயலில் மூன்றாவது கொலை வழக்குகள் பதிவாகின.

இதில் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் நடந்த கொலை, மிகவும் கொடூரமானது என்கின்றனர் போலீஸார்.

ரவுடி சங்கரின் தம்பியைக் கொலை செய்த ரவுடி யமஹா பாலாஜியை கொலை செய்த சங்கர் தரப்பு திட்டமிட்டது.

இதையடுத்து வீட்டின் சுப நிகழ்ச்சிக்காக யமஹா பாலாஜி வரும் தகவலை தெரிந்த சங்கர் தரப்பு, திருமணமண்டபத்தை சுற்றி வளைத்தது.

இளநீர் சங்கர்

பின்னர் மண்டபத்தில் கதவுகளை அடைத்து யமஹா பாலாஜியை சரமாரியாக வெட்டியது. இதில் தலையிலேயே வெட்டிய கொலையாளிகள், இறுதியில் வெட்டிய கத்தியை தலையிலேயே வைத்து விட்டு சென்றது.

இதுதான் கொடூரத்தின் உச்சம். போலீஸார் சென்று அந்தக்கத்தியோடு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில்தான் கத்தி எடுக்கப்பட்டது.

ஆகஸ்ட் மாதம் முதல்வாரத்தில் சென்னை அயனாவரத்தில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வரும் சரவணன் என்கிற சதீஷ் மீது மர்ம கும்பல் கொலை வெறிதாக்குதல் நடத்தியது. காங்கிரஸ் கட்சி பிரமுகரான சதீஷ் தாக்கப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியானது.

இந்தச் சம்பவத்துக்கும் ரவுடி சங்கருக்கும் தொடர்பு இருப்பதாகத் தகவல் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடி துரைமுத்து என்பவரால் காவலர் சுப்பிரமணி வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார்.

காவல்துறையில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் ரவுடி துரைமுத்துவும் உயிரிழந்தார் அவரின் இறுதி அஞ்சலியின்போது அரிவாளோடு துரைமுத்து புதைக்கப்பட்டார்.

காவலர் முபராக்
காவலர் முபராக்

அந்தப்புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியானது. இந்தச் சூழலில்தான் சென்னையில் பிரபலமான ரவுடி இளநீர் சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *