`மாணவனின் உயிரைப் பறித்த 3 டீ’ – குடும்பத்தின் சுமையை சுமந்தவனுக்கு நேர்ந்த சோகம் #video

சென்னை மண்ணடியில் அப்பாவுக்கு வேலை இல்லாததால் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ரியாஸ், டீ விற்று குடும்பத்துக்கு உதவியுள்ளான். 6-வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தான்.

மாணவன்

சென்னை மண்ணடி 2-வது மாடி மூர்தெருவைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (49). இவர் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, “எனது மூத்த மகன் ரியாஸ் (15). நான் கடந்த 30 ஆண்டுகளாக டிரைவராக பணியாற்றி வருகிறேன்.

லாக்டவுனால் வருமானம் இல்லாமல் தவித்து வந்ததையறிந்த எனது மூத்த மகன் ரியாஸ், அவரின் தாயாரிடம் அம்மா வீட்டில் டீபோட்டு தாருங்கள். அதை நான் பிளாஸ்க்கில் வைத்து விற்பனை செய்கிறேன் என்று கூறியுள்ளார். கடந்த 40 நாள்களாக டீ விற்றுவந்துள்ளான்.

மாணவனின் உயிரைப் பறித்த 3 டீ

இதையறிந்த நான் படிக்கிற வயதில் நீ டீ விற்க வேண்டாம் என்று சொன்னேன். அதற்கு அவன் அத்தா பரவாயில்லை பள்ளிக்கூடம் திறக்கும் வரை நான் உங்களுக்கு உதவுகிறேன் என்று கூறி டீ விற்று வந்துள்ளான்.

6-வது மாடி

20-ம் தேதி மதியம் என் மகனுக்கு போன் செய்து ஏன் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று கேட்டேன். அதற்கு என் மகன் அத்தா இப்போது வந்துவிடுகிறேன் என்று கூறினான். பிறகு சுமார் 4 மணியளவில் எனக்கு போன் வந்தது. உங்களுடைய மூத்த மகன் ரியாஸ், அரமணைக்கார தெருவில் உள்ள 6-வது மாடியிலிருந்து கீழே விழுந்து விட்டான் என்று கூறினர்.

உடனே நான் அங்கு சென்றேன். நான் அங்கு செல்வதற்குள் 108 ஆம்புலன்ஸில் வந்த மருத்துவக்குழுவினர், என் மகனை பரிசோதித்து விட்டு இறந்துவிட்டதாகக் கூறி சென்றுவிட்டனர்.

இதுசம்பந்தமாக விசாரிக்கும் போது என்னுடைய மகன் ரியாஸ், வீட்டின் உரிமையாளர் சாகுல் ஹமீது, மேலாளர் அலி அவர்களுக்கு 7-வது மாடிக்குச் சென்று டீ கொடுத்துள்ளான்.

மாடிப்படி

லிஃப்ட்தளம்

பிறகு அவன் கீழே இறங்கி வரும்போதுதான் ஆறாவது மாடியில் உள்ள படிகட்டு அருகில் உள்ள லிஃப்ட்தளம் எந்தவித தடுப்பும் இல்லாமல்இருந்ததால் கால் தவறி விழுந்ததாக போலீசாரிடம் வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

வீட்டின் உரிமையாளர்தான், 7-வது மாடியில் இருப்பதாகவும் டீ எடுத்துக் கொண்டு வரும்படி என் மகன் ரியாஸிடம் போனில் கூறியுள்ளார். அதனால்தான் டீயை எடுத்துக் கொண்டு ரியாஸ் 7-வது மாடிக்குச் சென்றுள்ளான். இந்த வீட்டின் உரிமையாளர் சட்டத்துக்கு புறம்பாக வீடு கட்டியுள்ளார்.

பேரழிப்பு

ஏற்கெனவே இவரது கட்டிடத்துக்கு அனுமதியின்றி 7 மாடி கட்டியதற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இவரின் பேராசைக்கும் அலட்சிய போக்கிற்கும் என் மகனை இழந்தது கடைசியாக இருக்கக்கட்டும். என் மகனின் இழப்பு ஈடுகொடுக்க முடியாத பேரழிப்பு என்பதை இந்தப் புகார் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

சம்பவம் நடந்த இடம்

என் மகன் இறப்புக்கு காரணமான வீட்டின் உரிமையாளர் சாகுல் ஹமீது மீது உரிய விசாரணை நடத்தி கடுமையான சட்டத்தின்கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

புகாரின்பேரில் எஸ்பிளனேடு போலீஸார் வீட்டின் உரிமையாளர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 304 (ஏ) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். குடும்பத்தின் சுமையை சுமந்த மாணவன், உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *