அத்தியாவசிய பணியாளர்களுக்காக அக். 5 முதல் சென்னையில் புறநகர் ரயில் சேவை

அத்தியாவசிய பணியாளர்களுக்காக அக். 5 முதல் சென்னையில் புறநகர் ரயில் சேவை தொடங்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 25 முதல் சென்னையில் புறநகர் ரயில் சேவை இயக்கப்படவில்லை. ரயில்வே ஊழியர்களுக்காக மட்டுமே புறநகர் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வரும் 5-ம் தேதி முதல் அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் தமிழக அரசு ஊழியர்களும் சிறப்பு புறநகர் ரயில்களில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.. ரயில் சேவைகள் குறித்த விவரங்கள் அனைத்து ரயில் நிலையங்களில் ஒட்டப்படும்.

அத்தியாவசிய பணிகளுக்காக செல்லும் அரசு ஊழியர்களுக்கு அனுமதிச்சான்று வழங்கிட, தமிழக அரசு இதற்கென ஒரு தனி அதிகாரியை (Nodal Officer) நியமித்துள்ளது. சிறப்பு அனுமதி சான்றிதழில், பயணம் செய்யும் அரசு ஊழியரின் பெயர், பதவி, துறை, அலுவலகம் போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.

அனுமதி வழங்கப்பட்ட அசல் சான்றிதழோடு அரசு ஊழியர் தனது புகைப்படத்தோடு கூடிய அடையாள அட்டையை ரயில்வேயிடம் காண்பித்த பின்னரே டிக்கெட் கவுண்டர் இருக்கும் இடத்தில் அனுமதி. பின்னர் டிக்கெட்டுடன் ரயில்களில் பயணிக்க முடியும்.

ரயில் நிலையங்களின் இரண்டு நிலைகளில் பயணிகள் சோதனை செய்யப்படுவர். முதல் நிலையில் ரயில்வே போலீசார்/ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயில் நிலைய நுழைவாயிலில் சோதனை செய்வர்.

இரண்டாவது நிலையில் ரயில் நிலைய நடைமேடைகளில் டிக்கெட் பரிசோதகர்கள் பயணிகளிடம் சோதனை மேற்கொள்வர்.

குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ரயில்கள் கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தம் செய்யப்படும். ரயில் நிலையங்களில் ஒலிக்கும் அறிவிப்புகளை பயணிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த முகக் கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி பின்பற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் கடைபிடிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு நியமித்துள்ள அதிகாரி மூலமாக வழங்கப்பட்டிருக்கும் அனுமதி சான்றிதழின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு ரயில் பயணச் சீட்டு வழங்கப்படும்.

சாதாரண ரயில் பயணச்சீட்டு மற்றும் மாதாந்திர பயணச்சீட்டுகள் அனைத்து புறநகர் ரயில் நிலைய கவுண்டர்களில் வழங்கப்படும்.

ரயில் நிலையங்களின் நுழையும்போதும், ரயில்களில் பயணம் செய்யும்போதும் அரசு அதிகாரி வழங்கியிருக்கும் சான்றிதழையும் அதனோடுகூட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வைத்திருத்தல் அவசியம்.

ஏற்கனவே சீசன் டிக்கெட்டுகளை வைத்திருப்போர் புறநகர் சேவைகள் நிறுத்தப்படும்போது இழந்த நாட்களின் அளவிற்கு அவர்களின் சீசன் டிக்கெட்டுகள் செல்லுபடியாகும்.

தமிழக அரசு அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்ட தமிழக அரசு ஊழியர்களுக்கு மட்டுமே ரயில் டிக்கெட்டுகள் வழங்கப்படும். சாதாரண பொதுமக்களுக்கு டிக்கெட் வழங்கப்படாது.

அனைத்து பயணிகளுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். குறிப்பிட்ட அளவில் உடல் வெப்பநிலை இருந்தால் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவர்.

ரயில் நிலைய நுழைவாயிலில், தமிழக அரசு அதிகாரி வழங்கியிருக்கும் அனுமதி சீட்டு மற்றும் அடையாள அட்டையை ரயில்வே காவல் துறையின் இடம் காண்பித்தல் அவசியம்.

ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அவ்வப்போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

அனைத்து பயணிகளும் முக கவசங்களை எல்லா நேரங்களிலும் அணிந்திருக்க வேண்டும் மற்றும் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *