சென்னையில் துப்புரவு தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள் உள்ளன. மாநகராட்சியின் 15-வது மண்டலம் சோழிங்கநல்லூர். இந்த மண்டலத்தில் சுமார் 7.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். ஆனால் மண்டலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப துப்புரவு பணியாளர்கள் இல்லை.
தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீடிக்கும் நிலையில் துப்புரவு தொழிலாளர்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். சோழிங்கநல்லூர் மண்டலத்தில் பணியாற்றும் துப்புரவு ஊழியர்களிடம் நீலாங்கரை போலீசார் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தொழிலாளர்களுக்கு தேவையான குடிநீர், சாப்பாடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் முறையாக செய்து கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த 15-வது மண்டல துப்புரவு தொழிலாளர்கள், மண்டல அலுவலகத்தில் இன்று காலை திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆவேசமடைந்த தொழிலாளர்களின் பிரதிநிதி ஒருவர், “உயிரைக் கொடுத்து வேலை செய்கிறோம். கொரோனா பிணத்தை புதைக்கிறோம். எங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை. போதிய துடைப்பம் வழங்கப்படவில்லை” என்று குற்றம் சாட்டினார்.
தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து தர்ணா கைவிடப்பட்டது.