வில்லிவாக்கத்தில் ஏழைகளின் கைராசி டாக்டர் மோகன்ரெட்டி மரணம்

சென்னை வில்லிவாக்கத்தில் பிரபலமான டாக்டர், கைராசியான டாக்டர் என பெயர் பெற்றவர் மோகன்ரெட்டி(86). இவரின் பெயரில் வில்லிவாக்கத்தில் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இங்கு ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த செலவில் டாக்டர் மோகன் ரெட்டி மருத்துவம் பார்த்துவந்தார்.

அதனால் எப்போதும் மருத்துவமனையில் கூட்டம் அலைமோதும். இருப்பினும் அனைவரிடமும் அன்பாக பழகும் டாக்டர் மோகன்ரெட்டி, வயது முதுமையானாலும் மனதளவில் இளமையாக திறம்பட பணியாற்றிவந்தார்.

வில்லிவாக்கம் சுற்றுவட்டார பகுதியில் டாக்டர் மோகன்ரெட்டியை தெரியாதவர்கள் என யாரும் இருக்க மாட்டார்கள். மேலும், இவர் அந்தப்பகுதியில் நடக்கும் கோயில் திருவிழாக்கள், திருமணம் என எந்த விசேஷம் என்றாலும் துக்க நிகழ்ச்சி என்றாலும் டாக்டர் மோகன்ரெட்டி பங்கேற்பார்.

கடந்த 20 நாள்களுக்கு முன் மோகன்ரெட்டிக்கு பிறந்தநாள் வந்தது. ஊரடங்கு என்பதால் ஏழைகளுக்கு தனிமனித இடைவெளியை பின்பற்றி அன்னதானம் வழங்கினார்.அதன்பிறகு அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை கிரீம்ஸ்ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் டாக்டர் மோகன்ரெட்டிக்கு கொரோனா தொற்று உறுதியானது. சிகிச்சைக்குப்பிறகு அவருக்கு கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்தது. அதனல் அவரை வீட்டுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் மருத்துவமனையில் செய்யப்பட்டது.

இந்தச் சமயத்தில்தான் நேற்றிரவு 11.45 மணிக்கு டாக்டர் மோகன்ரெட்டிக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டது. அப்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனிக்காமல் உயிரிழந்தார். கைராசி டாக்டர் மோகன் ரெட்டி உயிரிழந்த தகவல் காட்டு தீ போல வில்லிவாக்கம் பகுதியில் பரவியது. அதைக் கேள்விபட்ட மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

நடராஜன்
நடராஜன்

இதுகுறித்து டாக்டர் மோகன்ரெட்டியின் நீண்ட கால நண்பர் கு. நடராஜன் கூறுகையில், “கடந்த 1981-ம் ஆண்டு முதல் டாக்டர் மோகன்ரெட்டி எனக்கும் என்னுடைய சகோதரர்கள் தனசேகர், சந்திரசேகர் ஆகியோரின் குடும்பத்தினருக்கும் நெருங்கிய நண்பர். எங்களின் குடும்ப மருத்துவர்.

ஆந்திராவைச் சேர்ந்த டாக்டர் மோகன்ரெட்டி ஆரம்பத்தில் பெரம்பூர் ரயில்வே ஐசிஎஃப்பில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றினார். பிறகு ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்ய வில்லிவாக்கத்தில் மருத்துவமனையை தொடங்கினார். மருத்துவ தொழிலைத்தான் தன்னுடைய குடும்பமாக கருதியதால் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

எத்தனையோ உயிர்களைக் காப்பாற்றி டாக்டர் மோகன்ரெட்டி இன்று உயிரோடு இல்லை என்பதை மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரின் இறுதி சடங்கு இன்று நூங்கம்பாக்கத்தில் நடந்தது. ஊரடங்கு என்பதால் ஏராளமானவர்களால் டாக்டர் மோகன்ரெட்டிக்கு இறுதி அஞ்சலியை நேரில் செலுத்த முடியவில்லை. ஆனால் மக்களின் மனதளவில் டாக்டர் மோகன்ரெட்டி என்றுமே வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *