சென்னை வடபழனி, கருமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரகுராமன் (52). இவரின் மனைவி யுவராணி (49). இவரின் மகள் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். ரகுராமன், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். யுவராணி, சென்னையில் உள்ள தடய அறிவியல் துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் 1-ம் தேதி கழிவறையில் யுவராணி வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரகுராமன் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் யுவராணியை சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி 2-ம் தேதி அவர் இறந்தார்.
இதுகுறித்து வடபழனி காவல் நிலையத்தில் ரகுராமன் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் யுவராணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் யுவராணி தற்கொலைக்கு என்ன காரணம் என்று போலீஸார் விசாரித்தனர்.
யுவராணி, உடல் பருமனாக இருந்ததால் மனவேதனையடைந்துள்ளார். அதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. யுவராணியின் தற்கொலை குறித்து தொடர்ந்து போலீஸார் விசாரித்துவருகின்றனர். இந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.