சென்னை புளியந்தோப்பில் மேளம் அடித்தப்படி தௌலத் என்ற பெண்ணின் வீட்டுக்குச் சென்ற மந்திரவாதி ஒருவர் மயக்க மருந்து கலந்த தண்ணீரைத் தெளித்து 6 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நேரம் சரியில்ல
சென்னை புளியந்தோப்பு நேரு நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் அன்வர் பாட்ஷா. ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரின் மனைவி தௌலத். 46 வயதாகும் இவர் வீட்டிலேயே டெய்லராக பணியாற்றிவருகிறார். இவர்களுக்கு அசிபா என்ற மகள் உள்ளார். அன்வர் பாட்ஷா வேலைக்குச் சென்றுவிட்டார்.
அதனால் வீட்டில் தௌலத்தும் அசிபாவும் தனியாக இருந்தனர். அப்போது தௌலத் வீட்டின் முன் மேளம் அடித்தப்படி மந்திவாதியைப் போல ஒருவர் வந்தார். அவர், வாய்க்குள் முனங்கியப்படி நின்றுக் கொண்டிருந்தார்.
உடனே தௌலத்தின் மகள், 10 ரூபாயை அவரிடம் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்ட அந்த நபர், சிறுமியின் தலையில் கையை வைத்து இவளுக்கு நேரம் சரியில்ல என்று கூறினார். அதைக்கேட்டு தௌலத் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அந்த நபரிடம் இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று தௌலத் கேட்டிருக்கிறார் .உடனே தண்ணீர் எடுத்து கொண்டு வா என்று அந்த நபர் கூறியிருக்கிறார்.
மயக்க மருந்து கலந்த தண்ணீர்
இதையடுத்து வீட்டிலிருந்து தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்த தௌலத் அந்த நபரிடம் கொடுத்திருக்கிறார். அந்த தண்ணீரில் ஏதோ ஒன்றைக் கலந்த அந்த நபர், பின்னர் அதை மந்திரித்திருக்கிறார். அதன்பிறகு தண்ணீரை தௌலத், அவரின் மகள் மீது தெளித்திருக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் இருவரும் மயங்கி விழுந்தனர். இதையடுத்து சிறுமி, தௌலத் அணிந்திருந்த தங்க நகைகளை திருடிய மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
சிறிது நேரத்துக்குப்பிறகு மயக்கம் தெளிந்த தௌலத், அவரின் மகள், தாங்கள் அணிந்திருந்த தங்க நகைகள் மாயமாகியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தில் மந்திரவாதி குறித்து தௌலத் விசாரித்தார். அப்போது அவர்களுக்கு எந்தத் தகவலும் தெரியவில்லை.
நகைகள் திருட்டு
இதையடுத்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் 6 சவரன் தங்க நகைகளை மயக்க மருந்து தெளித்து மர்ம நபர் திருடிச் சென்று விட்டதாக புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் மர்ம நபரை தேடிவருகின்றனர். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.