ஆன்லைன் நைட்டியால் 60,000-ஐ இழந்த இளம்பெண்

சென்னை கொரட்டூரை சேர்ந்தவர் செல்வராணி (32). கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இவர் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே உள்ளார். சில நாட்களுக்கு முன்பு முன் ஆன்லைன் செயலி மூலம் நைட்டி வாங்க முன்பதிவு செய்தார்.

அந்த நைட்டியின் விலை ரூ.599. கணவரின் ஏடிஎம் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தினார். சம்பந்தப்பட்ட நிறுவனம் நைட்டியை விநியோகம் செய்யவில்லை. இதைத் தொடர்ந்து அவர் நைட்டிக்கான ஆர்டரை ரத்து செய்தார். சம்பந்தப்பட்ட நிறுவனம் பணத்தை திருப்பி அளிக்கவில்லை.

ஆன்லைன் மோசடி


இணையதளத்தில் இருந்து ஆன்லைன் செயலியின் தொலைபேசி எண்ணை தேடி கண்டுபிடித்தார். அந்த எண்ணை தொடர்பு கொண்டார்.. எதிர்முனையில் பேசிய நபர், செல்வராணியின் வங்கி விவரங்களை முழுமையாக கேட்டு அறிந்துள்ளார். மேலும் வாட்ஸ்அப்பில் ஏடிஎம் கார்டை புகைப்படத்தையும் பெற்றுள்ளார்.


பணத்தை திருப்பிச் செலுத்த ப்ளே ஸ்டோரில் குறிப்பிட்ட ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று செல்வராணியிடம் எதிர்முனை நபர் கூறியுள்ளார். அந்த செயலியையும் செல்வராணி பதிவிறக்கம் செய்திருக்கிறார்.
அப்போது செல்வராணியின் கணவரின் வங்கிக் கணக்கில் இருந்து அடுத்தடுத்து பணம் எடுக்கப்பட்டது. 10 நிமிடத்தில் ரூ.60 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டது.

பணம் எடுக்கப்பட்டது குறித்து செல்போனுக்கு தொடர்ந்து வந்த எஸ்.எம்.எஸ்.களால் செல்வராணி அதிர்ச்சியின் உச்சத்துக்கு சென்றார்.
ஆத்திரமடைந்த செல்வராணி அதே எண்ணை மீண்டும் அழைத்து கடுமையாக வாக்குவாதம் செய்தார். அந்த நபர் மீண்டும் குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கம் செய்யச் சொல்லியுள்ளார். இந்த முறை செல்வராணி ஏமாற தயாராக இல்லை. சம்பந்தப்பட்ட நபரை வார்த்தைகளால் வறுத்தெடுத்தார். உடனடியாக அந்த நபர் இணைப்புத் துண்டித்துவிட்டார்.

ரூ.599-க்கு நைட்டி


இந்த நூதன மோசடி குறித்து கொரட்டூர் போலீஸ் நிலையத்தில் செல்வராணி புகார் அளிக்கச் சென்றார். இது ஆன்லைன் மோசடி என்பதால் சென்னை வேப்பேரியில் செயல்படும் கமிஷனர் அலுவலகத்தின் சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளிக்கும்படி கொரட்டூர் போலீஸார் அறிவுறுத்தினர். அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவில் செல்வராணி புகார் மனு அளித்தார்.


இதுகுறித்து செல்வராணி கூறுகையில், மத்திய அரசு சீன செயலிகளுக்கு அண்மையில் தடை விதித்தது. இதனால் சீன செயலியான கிளப் பேட்டரி செயல்படவில்லை. இந்த செயலியில்தான் நான் ரூ.599-க்கு நைட்டி ஆர்டர் செய்திருந்தேன். சீன செயலி செயலிழந்து நைட்டியும் கைக்கு கிடைக்கவில்லை. எனவே இணையம் மூலமாக ஆர்டரை ரத்து செய்தேன்.

சர்வீஸ் சார்ஜ் போக ரூ.550 திருப்பித் தருவதாக தகவல் வந்தது. ஆனால் அந்த பணமும் வரவில்லை. அதன்பிறகே இணையத்தில் குறிப்பிட்ட செயலியின் கஸ்டமர் கேர் நம்பரை தேடி கண்டுபிடித்து போன் செய்தேன். வெறும் ரூ.550-க்காக, ரூ.60,000-ஐ இழந்துவிட்டேன். அபேஸ் செய்துவிட்டனர். இணையத்தில் பொருட்களை முன்பதிவு செய்வோர் உஷாராக இருக்க வேண்டியது அவசியம்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *