இளம்பெண்ணின் உயிருக்கு எமனாக மாறிய செயற்கை பல் – சென்னையில் சோகம்

சென்னையில் இளம்பெண் ஒருவர் தண்ணீர் குடித்தபோது அவருக்கு பொருத்தியிருந்த செயற்கை பல் ஒன்று கழன்று தொண்டைக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறத.

சென்னை வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரம், கே.பி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். புத்தக கடை நடத்திவருகிறார். இவரின்மனைவி ராஜலட்சுமிக்கு 43 வயதாகுகிறது. தனியார் பல் மருத்துவமனையில் ராஜலட்சுமி சிகிச்சை பெற்றிருக்கிறார். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர், உங்களுக்கு 3 பற்களில் பிரச்னை இருக்கிறது. அதனால் அதை எடுத்துவிட்டு புதியதாக செயற்கை பற்களைக் கட்ட வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார். அதன்படி ராஜலட்சுமிக்கு 3 செயற்கை பற்கள் கட்டப்பட்டிருக்கின்றன. அதன்பிறகு ராஜலட்சுமி, வழக்கமான வேலைகளை செய்து வந்தார்.

இந்தநிலையில் இன்று அவர் வீட்டில் தண்ணீர் குடித்திருக்கிறார். அப்போது செயற்கையாக பொருத்தப்பட்ட பல் ஒன்று கழன்று தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது. அதனால் மூச்சுவிட முடியாமல் திணறிய உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு ராஜலட்சுமிக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அதில் எதுவும் தெரியவில்லை. அதற்குள் அவர் மயங்கி விட்டார். இதையடுத்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ராஜலட்சுமியை கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கெனவே ராஜலட்சுமி உயிரிழந்து விட்டார் என்று கூறினர். அதைக்கேட்டு அவரின் உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ராயலா நகர் போலீஸார் ராஜலட்சமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜலட்சுமி, பல்லை விழுங்கியதால் உயிரிழந்தாரா அல்லது வேறு எதுவும் காரணமா என்பது பிரேத பரிசோதனையில் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *