கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காருக்குள் விளையாடிய குழந்தைகள் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் குலதீபமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அய்யனார். இவரின் மகள் சிறுமி வனிதா (3), அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் ராஜ் (7). வனிதாவும் ராஜ்ஜிம் வீட்டின் அருகில் விடிளையாடிக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து குழந்தைகளைக் காணவில்லை. அதனால் அய்யனார் மற்றும் ஏழுமலை ஆகியோரின் குடும்பத்தினர் குழந்தைகளைத் தேடினர்.
நீண்ட நேரமாக தேடியும் குழந்தைகளைக் கண்டுபிடிக்கவில்லை. அதனால் அங்கு பதற்றம் நிலவியது. குழந்தைகள் எங்கு சென்றிருப்பார்கள் என பொதுமக்களும் தேடினர். அப்போது எதேச்சையாக வீட்டின் அருகில் நின்றுக் கொண்டிருந்த காரை எட்டிப்பார்த்தபோது வனிதா, சிறுவன் ராஜ் இருவரும் மயங்கிய நிலையில் காருக்குள் கிடந்தனர்.

உடனடியாக கார் கதவை திறந்து குழந்தைகளை மீட்டனர். ஆனால் அவர்கள் இருவருக்கும் மூச்சு பேச்சு இல்லை. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர். அதைக்கேட்டு உறவினர்களும் பெற்றோர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், குழந்தைகளின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு குழந்தைகளின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “காரின் அருகே சிறுமி வனிதாவும் சிறுவன் ராஜ்ஜிம் விளையாடியுள்ளனர். அப்போது காரின் கதவு சரியாக பூட்டாமல் இருந்ததைப் பார்த்த அவர்கள் அதை திறந்து காருக்குள் சென்று அமர்ந்துள்ளனர். அப்போது காரின் கதவு தானாக மூடிக் கொண்டதால் இருவரும் காருக்குள் சிக்கிக் கொண்டனர். வெளியே வர முடியாமல் தவித்த இரண்டு குழந்தைகளும் மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர்.” என்றனர்.
கார் டிரைவரின் கவனக்குறைவால் ஒரே நேரத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.