அம்மன் கோயிலில் வீசப்பட்ட பெண் குழந்தை – அள்ளி அணைத்த கலெக்டர்

திருவள்ளூர் கடம்பத்தூர் ஒன்றிய பகுதியில் உள்ள நாகாத்தம்மன் கோயில் முன், பிறந்து 10 நாள்களே ஆன பெண் குழந்தை கிடந்தது. அந்தக் குழந்தைக்கு நாகமணி என கலெக்டர் மகேஸ்வரி பெயரிட்டார்.

வீறிட்டு அழுத குழந்தை


திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கொட்டையூர், நரசமங்கலம் பகுதியில் உள்ள நாகாத்தம்மன் கோயில் பகுதியிலிருந்து கடந்த 28-ம் தேதி பச்சிளம் குழந்தை அழும் சத்தம் கேட்டது. அதைக்கேட்டு அங்கு வந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கோயில் அருகே பச்சிளம் பெண் குழந்தை வீறிட்டு அழுதுக் கொண்டிருந்தது. அந்தக் குழந்தையை மீட்ட மக்கள், பசி அடங்க பால் கொடுத்தனர். மப்பேடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு வந்த போலீசார், குழந்தையை மீட்டு திருவள்ளூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது குழந்தை நலமாக உள்ளது.

கொஞ்சிய கலெக்டர்


இந்தத் தகவல் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு தெரியவந்ததும் குழந்தையை கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வரும்படி கூறினார். அழகான பெண் குழந்தையைப் பார்த்ததும் கலெக்டர் மகேஸ்வரி அள்ளி அணைத்து, தூக்கி வைத்து கொஞ்சினார்.

அங்குள்ளவர்கள் குழந்தைக்கு நீங்களே பெயர் சூட்டுங்கள் என்று கூறியதும் நாகமணி என பெயரிட்டார். பின்னர் குழந்தைகள் சிறப்பு தத்து மையத்தில் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.

குழந்தையின் தாய் யார்?


மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் செந்தில், குழந்தைகள் நலக்குழு தலைவர் வனஜா முரளிதரன், மருத்துவமனை நர்ஸ்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

குழந்தையை கோயில் அருகே விட்டு சென்றது யாரென்று மப்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர். குழந்தையின் தாய் குறித்த தகவல்கள் இதுவரை தெரியவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *