சீனாவின் முதல் கொரோனா தடுப்பூசி

சீனாவின் கான்சினோ பயோலாஜிக்ஸ் மருந்து நிறுவனம் அந்த நாட்டின் முதல் கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு சீன அரசு காப்புரிமை வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றன.

அமெரிக்காவின் மாடர்னா மருந்து நிறுவனம், பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளன.
இதற்கிடையில், உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்திருப்பதாக அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் கடந்த 11-ம் தேதி அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் ரஷ்யாவிடம் உதவி கோரியுள்ளன.எனினும் ரஷ்ய தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கேள்வி எழுப்பியுள்ளன. 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கரோனா தடுப்பூசி போடக்கூடாது என்று ரஷ்ய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

கான்சினோ பயோலாஜிக்ஸ் நிறுவன ஆய்வுக்கூடம்.
கான்சினோ பயோலாஜிக்ஸ் நிறுவன ஆய்வுக்கூடம்.

மேலும் ரஷ்ய தடுப்பூசி முதலில் சுகாதார ஊழியர்களுக்கு மட்டுமே போடப்படும் என்றும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில்தான் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தடுப்பூசி கொண்டு வரப்படும் என்றும் ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.

சீனாவின் கான்சினோ பயோலாஜிக்ஸ் மருந்து நிறுவனம், சீன ராணுவ மருத்துவ அறிவியல் மையத்துடன் இணைந்து அந்த நாட்டின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசிக்கு ‘ஏடி5-என்சிஓவி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 96 பேருக்கும், 2-ம் கட்டமாக 224 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

புதிய தடுப்பூசிக்கு காப்புரிமை கோரி சீனாவின் தேசிய அறிவுசார் சொத்து ஆணையத்திடம் கான்சினோ பயோலாஜிக்ஸ் நிறுவனம் விண்ணப்பித்தது. இதை ஏற்று கடந்த 11-ம் தேதி தடுப்பூசிக்கு ஆணையம் காப்புரிமை வழங்கியுள்ளது.

கான்சினோ பயோலாஜிக்ஸ் நிறுவனம் சார்பில் தற்போது 3-ம் கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதில் 5,000 பேர் பங்கேற்கின்றனர். சீனா மட்டுமன்றி ரஷ்யா, சிலி, சவுதிஅரேபியா, மெக்ஸிகோ உள்ளிட்ட வெளிநாடுகளிலும் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *