கடந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி ஜம்மு-காஷ்மீரில் இருந்து லடாக் தனி யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. லடாக் பகுதியில் லே, கார்கில் ஆகிய 2 மாவட்டங்கள் உள்ளன. லடாக்கை ஆக்கிரமிக்க பாகிஸ்தானும் சீனாவும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
கடந்த 1962-ம் ஆண்டு இந்தியா, சீனா இடையே நடைபெற்ற போருக்கு முக்கிய காரணம் லடாக். இதேபோல கடந்த 1999 மே மாதம் லடாக்கின் கார்கில் பகுதியை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டது. லடாக்கை ஆக்கிரமிக்க சீனாவும், பாகிஸ்தானும் கண்கொத்தி பாம்பாக காத்திருக்கின்றன. இரு நாடுகளும் லடாக் எல்லையில் அத்துமீறும் போதெல்லாம் இந்தியா சூடு வைத்து வருகிறது.

கடந்த மே மாத தொடக்கத்தில் சீன வீரர்கள் கிழக்கு லடாக்கின் 4 முனைகளில் அத்துமீறி நுழைய முயன்றனர். போர் பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் எல்லையில் ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே ஆயுதங்களை பயன்படுத்தாமல் சீன வீரர்களை, இரண்டு தட்டு தட்டி இந்திய வீரர்கள் வீரட்டியடித்தனர்.
அடங்காத சீன வீரர்கள், லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15-ம் தேதி மிகப்பெரிய மோதலில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் சீன தரப்பில் 350 வீரர்கள் குழுமியிருந்தனர். இந்திய தரப்பில் 50 வீரர்கள் மட்டுமே இருந்தனர். இரு தரப்பும் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டனர்.

இந்திய தரப்பில் தெலங்கானாவை சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபு, தமிழகத்தை சேர்ந்த பழனி உள்பட 20 வீரர்கள், வீரமரமணடைந்தனர். சீன தரப்பில் 50 வீரர்கள் உயிரிழந்தனர். உயிர் தப்பிய இதர சீன வீரர்கள் துண்டை காணோம், துணியை காணோம் என்று தலைதெறிக்க ஓடிவிட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 3-ம் தேதி நேரடியாக லடாக்குக்கு சென்று வீரர்கள் மத்தியில் எழுச்சிமிகு உரையாற்றினார். சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார். டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக பகிரங்கமாக குரல் கொடுத்தன. ரஷ்யா எந்த பக்கமும் சாயாமல் வழக்கம்போல நடுநிலை வகித்தது. இந்திய வீரர்களின் அசைக்க முடியாத அரண், மத்திய அரசின் வர்த்தகரீதியான போர், சர்வதேச அழுத்தத்தால் லடாக் எல்லையில் இருந்து 2 கி.மீ. தொலைவுக்கு சீன ராணுவம் பின்வாங்கியது.
எனினும் எல்லையில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களையும் ஆயுதங்களையும் சீன ராணுவம் குவித்து வைத்துள்ளது. போர் பதற்றத்தை அவ்வப்போது பற்ற வைத்து கொண்டே இருக்கிறது.

லடாக்கின் பான்கோங் ஏரி, 5-வது பிங்கர் பகுதியை விட்டு வெளியேறாமல் சீனா வாலாட்டுகிறது. அதன் வாலை ஒட்ட நறுக்க இந்தியா எப்போதோ தயாராகிவிட்டது. ஏற்கெனவே அதிநவீன சுகோய் போர் விமானங்கள், ஆகாஷ் உள்ளிட்ட நாசகார ஏவுகணைகள், டி 90 டாங்கிகள் லடாக் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளன. பான்கோங் ஏரியில் மின்னல் வேகத்தில் சீறிப் பாயும் படகுகள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதற்கெல்லாம் மேலாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் கூறும்போது, “இந்தியாவின் அணி சேரா கொள்கை எப்போதோ காலாவதியாகிவிட்டது. சர்வதேச விவகாரங்களில் இனிமேலும் வழிபோக்கனாக வேடிக்கை பார்க்கமாட்டோம். நட்பு நாடுகளோடு இணைந்து களத்தில் இறங்கி அடிப்போம்” என்று கூறியிருக்கிறார்.
அதாவது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, ஜப்பானுடன் சேர்ந்து சீனாவை தூக்கிப் போட்டு மிதிப்போம் என்று இந்தியா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.