சீன ராணுவம், இந்திய நிலையை கைப்பற்ற முயற்சி

இந்திய நிலையை கைப்பற்ற சீன ராணுவம் முயற்சி மேற்கொண்டது. இதை முறியடித்த இந்திய வீரர்கள், சீன வீரர்களை விரட்டியடித்தனர்.

கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. அப்போது சீன வீரர்கள், ஆணி பதித்த இரும்பு கம்பிகள், ஈட்டிகள் மூலம் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

20 வீரர்கள் வீரமரணம்

இதில் கர்னல் சந்தோஷ் பாபு, தமிழக வீரர் பழனி உட்பட 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் ஆக்ரோஷமான தாக்குதலில் சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர். இதனை இந்திய, அமெரிக்க உளவுத் துறைகள் உறுதி செய்துள்ளன.

ராணுவ, ராஜ்ஜியரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு லடாக் எல்லைப் பகுதிகளில் இருந்து 2 கி.மீ. தொலைவுக்கு சீன வீரர்கள் பின்வாங்கினர்.

எனினும் கடந்த 29-ம் தேதி லடாக்கின் பான்காங் ஏரியின் தெற்கு கரை பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய இந்திய வீரர்கள், பான்காங் ஏரியின் பிளாக் டாப், ஹெல்மெட் பகுதியில் 3 மலை முகடுகளை தங்கள் வசமாக்கினர்.

60 சீன வீரர்கள்

கடந்த திங்கள்கிழமை மாலை 6 மணி அளவில் பான்காங் ஏரியின் தெற்குப் பகுதியில், சுமார் 60 சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றுள்ளனர்.

கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் பாணியில் இரும்பு கம்பிகள், ஈட்டிகள், கூர்மையான ஆயுதங்களை அவர்கள் வைத்திருந்தனர். அங்குள்ள இந்திய நிலையை கைப்பற்ற அவர்கள் தீவிர முயற்சி செய்தனர்.

லடாக்கின் பான்காங் ஏரி பகுதியில் கடந்த திங்கள்கிழமை கூர்மையான ஆயுதங்களுடன் குவிந்த சீன வீரர்கள்.
லடாக்கின் பான்காங் ஏரி பகுதியில் கடந்த திங்கள்கிழமை கூர்மையான ஆயுதங்களுடன் குவிந்த சீன வீரர்கள்.

லடாக் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இந்திய வீரர்கள், சீன வீரர்களை விரட்டியடித்து பின்வாங்க செய்தனர். விரக்தி அடைந்த சீன வீரர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். சுமார் 15 ரவுண்டுகள் அவர்கள் சுட்டனர்.

இதற்கு ஆதாரமாக சீன வீரர்களின் கைகளில் கூர்மையான இரும்பு ஆயுதங்கள், துப்பாக்கிகளை வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

இந்த உண்மையை மறைத்து சீன ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ராணுவ வீரர்கள், சீன எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர். இருதரப்பு ஒப்பந்தங்களை மீறி துப்பாக்கியால் சுட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “இந்திய ராணுவ வீரர்கள் எல்லையை தாண்டவில்லை. எவ்வித அத்துமீறல்களிலும் ஈடுபடவில்லை. துப்பாக்கியால் சுடவில்லை.

சீன ராணுவம் தவறான தகவல்களை வெளியிட்டு சர்வதேச சமூகத்தை குழப்ப முயற்சி செய்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர ஆலோசனை

எல்லை நிலவரம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் தலைமை தளபதி பிபின் ராவத், முப்படைகளின் தளபதிகள் பங்கேற்றனர். எதையும் எதிர்கொள்ள முப்படைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில் லடாக்கின் பான்காங் ஏரியின் வடக்கு கரைப் பகுதியில் சீன ராணுவம் புதிதாக சாலை அமைத்து வருவது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எல்லைப் பகுதி முழுவதும் இந்திய ராணுவ தரப்பில் வீரர்களும் ஆயுதங்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *