காந்த அலைகள் மூலம் இந்திய வீரர்களை விரட்டினோம்.. சீனா கொக்கரிப்பு…

காந்த அலைகள் மூலம் இந்திய வீரர்களை விரட்டினோம் என்று சீனா கொக்கரித்துள்ளது. 

கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் பல்வேறு முனைகளில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தி பின்வாங்க செய்தனர். இதன்பின் கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இருநாடுகளின் வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது.

இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள், வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40 முதல் 50 வீரர்கள் உயிரிழந்ததை அமெரிக்க, இந்திய உளவுத் துறைகள் உறுதி செய்தன. கல்வான் சண்டையை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் எழுந்தது. சீன ராணுவம் சுமார் 60,000 வீரர்களையும் ஆயுதங்களையும் லடாக் எல்லையில் குவித்தது. அதற்கு இணையாக இந்திய ராணுவமும் ஆயுதங்களையும் வீரர்களையும்  முன்வரிசையில் நிறுத்தியது. கடும் குளிரிலும் இந்திய ராணுவ வீரர்கள் எல்லையில் காவல் காத்து வருகின்றனர்.

இந்நிலையில் சீன ராணுவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிரிட்டனில் இருந்து வெளியாகும் தி டைம்ஸ் நாளிதழ் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

“லடாக்கில் இந்திய ராணுவத்தினரை விரட்ட சீன ராணுவம் மைக்ரோ வேவ் ஆயுதங்களை பயன்படுத்தி உள்ளது. அதாவது எலக்ட்ரோ மேக்னடிக் எனப்படும் காந்த அலைகள் மூலம் வீரர்களை தாக்கினர். இந்த காந்த அலைகள் வீரர்களின் உடலில் உள்ள நீரை சூடாக்கி அவர்களுக்கு உடல் நலக்குறைவை ஏற்படுத்தும். தாங்க முடியாத தலைவலி, வாந்தி, மயக்கம் ஏற்படும். இவ்வாறு எல்லையில் இருந்து இந்திய வீரர்களை சீன ராணுவம் விரட்டியுள்ளது. மைக்ரோ வேவ் ஆயுதங்கள் மூலம் ஒரு கி.மீ. தொலைவு வரை தாக்குதல் நடத்த முடியும்” என்று தி டைம்ஸ் நாளிதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த செய்தியை இந்திய ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதில் துளியும் உண்மை இல்லை என்று ராணுவம் தெரிவித்திருக்கிறது.

அமெரிக்க ராணுவத்திடமும் இதுபோன்ற மைக்ரோவேவ் ஆயுதங்கள் உள்ளன. ஆப்கானிஸ்தான் போரின்போது இந்த ஆயுதங்களை பயன்படுத்த அமெரிக்க ராணுவம் திட்டமிட்டிருந்தது. ஆனால் மனிதாபிமான அடிப்படையில் மைக்ரோவேவ் ஆயுதங்களை அமெரிக்கா பயன்படுத்தவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *