இந்திய ஜனாதிபதி, பிரதமரை உளவு பார்க்கும் சீனா

இந்திய ஜனாதிபதி, பிரதமரை உளவு பார்க்கும் சீனா மிகப்பெரிய சதித்திட்டங்களை தீட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் 5 முன்னாள் பிரதமர்கள், 40 முன்னாள், இந்நாள் முதல்வர்கள், 350 எம்.பி.க்கள் உட்பட சுமார் 10 ஆயிரம் இந்திய பிரபலங்களை சீன நிறுவனம் வேவு பார்த்துள்ளது.

இந்தியா, இந்தோனேசியா, மலேசியா உட்பட சுமார் 22-க்கும் மேற்பட்ட அண்டை நாடுகளின் நிலம், கடல் எல்லைப் பகுதிகளை ஆக்கிரமிக்க சீனா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

சர்வதேச கடல் போக்குவரத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர தென் சீன கடல், கிழக்கு சீன கடல் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்த முழுவீச்சில் செயல்படுகிறது.

சீனாவின் சர்வாதிகார நடவடிக்கைகளை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பகிரங்கமாக கண்டித்து வருகின்றன. எனினும் உலக வல்லரசான அமெரிக்காவுக்கு போட்டியாக சீனா தன்னை முன்னிறுத்தி வருகிறது.

சமூக வலைதளங்கள்

சீனாவை சேர்ந்த தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ‘ஜென்ஹுவா டேட்டா இன்பர்மேஷன் டெக்னாலஜி கோ நிறுவனம். இந்த நிறுவனம் சீன அரசு மற்றும் அந்த நாட்டு ராணுவத்துடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது ,சீன அரசுக்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, பிரிட்டன், ஜப்பான், கனடா, இந்தோனேசியா, மலேசியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், அரசு, நீதித் துறை தலைவர்கள், மூத்த அதிகாரிகளை ஜென்ஹுவா உளவு பார்த்துள்ளது.

ராம் நாத் கோவிந்த்
ராம் நாத் கோவிந்த்

ட்விட்டர், பேஸ்புக், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், டிக்டாக் சமூக வலைதளங்கள் மூலமாக உலக தலைவர்களின் தகவல்களை அந்த நிறுவனம் திருடியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பேராசிரியர் கிறிஸ்டோபர் பால்டிங், சீனாவின் ஜென்ஹுவா நிறுவனத்தின் உளவு மோசடிகளை வெட்டவெளிச்சமாக்கி உள்ளார்.

சீனாவின் பீகிங் பல்கலைக்கழகத்தில் 9 ஆண்டுகள் வணிகவியல் பேராசிரியராக பணியாற்றிய அவர், தற்போது வியட்நாமின் புல்பிரைட் பல்கலைக்கழக பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இந்தியாவை சேர்ந்த ‘ தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’, ஆஸ்திரேலியாவை சேர்ந்த ‘ஆஸ்திரேலியன் பைனான்சியல் ரீவியூ’, பிரிட்டனை சேர்ந்த ‘டெய்லி டெலிகிராப்’ உள்ளிட்ட ஊடகங்கள் வாயிலாக சீன நிறுவனத்தின் உளவு மோசடியை பேராசிரியர் கிறிஸ்டோபர் பால்டிங் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

2.5 லட்சம் பேர்

ஜென்ஹுவாவுக்கு சுமார் 20 வெளிநாடுகளில் தகவல் திரட்டும் மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் மூலம் நாளொன்றுக்கு 15 கோடி தகவல்களை அந்த நிறுவனம் திரட்டி வருகிகிறது.

அமெரிக்க பேராசிரியர் கிறிஸ்டோபர் வெளியிட்டுள்ள ஆதாரங்களின்படி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சுமார் 2.5 லட்சம் பேரை ஜென்ஹுவா உளவு பார்த்துள்ளது.

அமெரிக்காவில் மட்டும் 52,000 பேர், ஆஸ்திரேலியாவில் 35,000 பேர், இந்தியாவில் 10,000 பேர், கனடாவில் 5,000 பேர், இந்தோனேசியாவில் 2,100 பேர், மலேசியாவில் 1,400 பேர் ஜென்ஹுவாவின் ரகசிய கண்காணிப்பு வளையத்தில் இருந்துள்ளனர்.

ஜனாதிபதி, பிரதமர்

இந்தியாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடியை ஜென்ஹுவா நிறுவனம் உளவு பார்த்துள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர்கள் பிரணாப் முகர்ஜி, அப்துல் கலாம் மற்றும் அவர்களது உறவினர்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், வாஜ்பாய், தேவ கவுடா, மன்மோகன் சிங் ஆகிய 5 முன்னாள் பிரதமர்கள், அவர்களது உறவினர்கள் ரகசியமாக வேவு பார்க்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் சீன நிறுவன கண்காணிப்பு வளையத்தில் இருந்துள்ளனர்.

மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ரவிசங்கர் பிரசாத், பியூ,ஷ் கோயல், ஸ்மிருதி இரானி மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 350 எம்.பி.க்கள் குறித்த தகவல்களை ஜென்ஹுவா திரட்டியுள்ளது.

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உட்பட 40 முன்னாள், இந்நாள் முதல்வர்களையும் சீன நிறுவனம் கண்காணித்துள்ளது.

முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி, முன்னாள் பிஹார் முதல்வர் லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே உட்பட மூத்த நீதிபதிகள் பலரையும் சீன நிறுவனம் வேவு பார்த்துள்ளது. முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், முப்படைகளை சேர்ந்த அன்றைய, இன்றைய ராணுவ தளபதிகள் என 60 பேர் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், இந்திய அணுசக்தி கழகத்தின் மூத்த அதிகாரிகளின் சமூக வலைதள நடவடிக்கைகளும் உளவு பார்க்கப்பட்டுள்ளன. அவர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர்கள் ரத்தன் டாடா, கவுதம் அதானி, நடிகை மூன் மூன் சென், நடிகர் வினோத் கன்னா, இயக்குநர் ஷியாம் பெனகல் உட்பட பல்வேறு துறைகளைச் பிரபலங்களையும் ஜென்ஹுவா கண்காணித்துள்ளது.

‘ஹைபிரிட்’ போர்

லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேலுக்கு எதிராக நாச வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

ஹிஸ்புல்லாவுக்கு ஈரான் அரசு தாராளமாக நிதியுதவி வழங்கி வருகிறது. இஸ்ரேலுக்கு எதிராக நேரடியாக மோதாமல் ஹிஸ்புல்லா மூலம் ஈரான் மறைமுக போரை நடத்துகிறது.

இதேபோல உக்ரைன் மீது ரஷ்யா மறைமுக போரை நடத்தி வருகிறது. உக்ரைனின் கிரிமியா பகுதியை தன்னுடன் இணைத்துக் கொண்ட ரஷ்யா, அந்த நாட்டுக்கு எதிராக தீவிரவாத அமைப்புகளை தூண்டிவிட்டு வருகிறது. இதையே ‘ஹைபிரிட் போர்’ என்றழைக்கின்றனர்.

தற்போது லடாக் எல்லையில் இந்திய ராணுவத்துடன் சீன ராணுவம் நேருக்கு நேராக மோதி வருகிறது.

அதேநேரம் இந்தியாவுக்கு எதிராக ‘ஹைபிரிட்’ போர் ‘ என்ற மறைமுக போரை நடத்த சீனா திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதன்காரணமாகவே இந்தியாவில் 10,000-க்கும் மேற்பட்டோரை சீனா உளவு பார்த்திருக்கிறது.

சீன வானொலி

அரசியல், அரசு நிர்வாகம், பாதுகாப்பு, வணிகம், தொழில்நுட்பம், ஊடகம் உட்பட அனைத்து துறை சார்ந்த பிரபலங்களின் தகவல்களை சமூக வலைதளங்கள் மூலமாக சீனாவின் ஜென்ஹுவா நிறுவனம் திருடியுள்ளது.

சீன வானொலி சுமார் 40-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மொழிகளில் செய்தி ஒலிபரப்பு செய்து வருகிறது. இந்தியாவில் இந்தி, வங்க மொழி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சீன வானொலி சேவை ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

எனவே உள்ளூர் பிராந்திய மொழிகளில் வெளியாகும் சமூக வலைதள செய்திகளை சேகரிப்பது சீனாவுக்கு சாதரண விஷயம்.

அந்த வகையில் சமூக வலைதளங்கள், ஊடகங்களில் வெளியான தகவல்கள் முழுவதையும் சீன நிறுவனமான ஜென்ஹுவா திரட்டி தொகுத்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு மூலமாகவும் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்திய தலைவர்கள், மக்களின் உணர்வுகளை சீனாவால் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

இந்தியாவில் எங்கெங்கு போராட்டங்கள் நடைபெறுகின்றன? என்ன காரணத்துக்காக போராட்டம் நடைபெறுகிறது? சட்டம் ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பதை சீனா அலசி ஆராய முடியும்.

வடகிழக்கு மாநிலங்களில் சீன ஆதரவு பெற்ற தீவிரவாத குழுக்கள் செயல்படுவதாக நீண்டகாலமாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

தற்போது அம்பலமாகியுள்ள சீனாவின் உளவு மோசடிக்கு பின்னால் மிகப்பெரிய சதித் திட்டங்கள் ஒளிந்திருக்கக்கூடும் என்று சர்வதேச பாதுகாப்புத் துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *