இந்தியா-சீனா போர் பதற்றம் தணிகிறது- எல்லையில் 2 கி.மீ. பின்வாங்கியது சீன படை

லடாக் எல்லையில் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு சீன படைகள் பின்வாங்கியுள்ளது. இதன்காரணமாக இந்தியா, சீனா இடையிலான போர் பதற்றம் சற்று தணிந்திருக்கிறது.


கடந்த ஆண்டு காஷ்மீரில் இருந்து தனி யூனியன் பிரதேசமாக லடாக் பிரிக்கப்பட்டது. இந்த யூனியன் பிரதேசத்தில் புத்த மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இது சீன ஆட்சிக்கு உட்பட்ட திபெத் எல்லையில் அமைந்துள்ளது.


கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் 4 பகுதிகளில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன்பின் கடந்த ஜூன் 15-ம் தேதி கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது.


இந்தியா, சீனா இடையே ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தங்களின்படி எல்லை ரோந்து பணியில் இருதரப்பு வீரர்களும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது. இதனால் இரு நாட்டு வீரர்களும் ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் இரும்பு கம்பி, உருட்டுக் கட்டையால் ஆக்ரோஷமாக தாக்கினர்.


இதில் இந்திய தரப்பில் தெலங்கானாவை சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபு, தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி உட்பட 20 வீரர்கள் உயிரிழந்தனர். சீன தரப்பில் 40 முதல் 50 வீரர்கள் வரை உயிரிழந்தனர். ஆனால் அவமானம் கருதி அந்த நாட்டு அரசு உயிரிழப்பை மறைத்து வருகிறது.


இந்த மோதலை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்ததது. இருதரப்பினரும் எல்லையில் வீரர்களையும் ஆயுதங்களையும் குவித்து வந்தது. பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பு நேரடியாக லடாக் எல்லைக்கு சென்று ராணுவ வீரர்கள் மத்தியில் வீர உரையாற்றினார். அப்போது சீனாவுக்கு அவர் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்.


அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் சீனாவின் அத்துமீறலை மறைமுகமாகக் கண்டித்தன.


இந்நிலையில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்ட ‘பி14’ கண்காணிப்பு முனையில் இருந்து சீன வீரர்கள் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு பின்வாங்கியுள்ளனர். இதனால் எல்லையில் போர் பதற்றம் சிறிது தணிந்திருக்கிறது.


எனினும் சீன ராணுவம், நிறம் மாறும் பச்சோந்தி என்பதால் எல்லையில் இந்தியாவின் முப்படைகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *