ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சீன இளைஞர் தொப்பையால் உயிர் தப்பியுள்ளார்.
சீனாவின் ஹெனான் மாகாணம் லூயாங் நகர் அருகேயுள்ள புலியூடியான் கிராமத்தை சேர்ந்தவர் லீ (வயது 28). இவரது வீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த கிணறை கான்கிரீட் பலகையால் மூடவில்லை.

சில நாட்களுக்கு முன்பு லீயும் அவரது நண்பர்களும் சேர்ந்து கிணறை கான்கிரீட் பலகை மூலம் மூடுவதற்கான பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக லீ கிணற்றில் தவறி விழுந்தார்.
அவர் குண்டாக இருந்ததால் அதிர்ஷ்டவசமாக கிணற்றுக்குள் விழவில்லை. அவரது தொப்பை தடுத்து நிறுத்திவிட்டது.
பாதி உடல் உள்ளேயும் மீதி உடல் கிணற்றுக்கு மேலேயும் இருந்தது.
தகவல் அறிந்து தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து சாமர்த்தியமாக லீ யை வெளியே தூக்கினர்.
மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இளைஞர் லீ மீட்கப்பட்ட வீடியோ, புகைப்படங்களை தீயணைப்புத் துறை வெளியிட்டுள்ளது.
மீட்புப் பணி குறித்து தீயணைப்பு படை வீரர்கள் கூறும்போது, “கிணற்றில் இருந்த மீட்கப்பட்ட நபர் 130 கிலோ எடை கொண்டவர். அவரது தொப்பையால் அவர் உயிர் தப்பியுள்ளார். ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்திருந்தால் அவர் உயிர்பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருந்திருக்கும்” என்று தெரிவித்தனர்.