கல்லூரி செமஸ்டர் தேர்வை வரும் செப்டம்பருக்குள் நடத்த முடியாது. மத்திய அரசு முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
யுஜிசி உத்தரவு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) புதிய வழிகாட்டுதல்களை அண்மையில் வெளியிட்டது.
அதில் “நாடு முழுவதும் அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் வரும் செப்டம்பருக்குள் இறுதி செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டும். இறுதி செமஸ்டர் தேர்வை எழுத இயலாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வை நடத்த வேண்டும்” என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
பழனிசாமி எதிர்ப்பு
இதுதொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை ரமேஷ் பொக்கிரியாலுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “வரும் செப்டம்பருக்குள் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வை நடத்த முடியாது. எனவே முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பல்வேறு மாநில அரசுகளும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளன. கொரோனா தடுப்பு பணியில் மாநிலங்கள் எதிர்கொள்ளும் சவால்களை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப், மேற்குவங்கம், ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநில அரசுகள் குற்றம் சாட்டியுள்ளன.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.