மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவி வகிக்கிறார்.

நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு விசாரணையில் மும்பை போலீஸார் ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக புகார் எழுந்தது. தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

மகாராஷ்டிர அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகை கங்கனா ரணாவத்தின் மும்பை அலுவலகம் விதிமீறல் காரணங்களுக்காக சில நாட்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது.

முதல்வர் உத்தவ் தாக்கரேவை விமர்சித்து கார்ட்டூன் வெளியிட்ட கடற்படை முன்னாள் வீரர் மதன் சர்மாவை ஆளும் சிவசேனா கட்சியினர் கடுமையாக தாக்கினர். மேலும் மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்று 10 லட்சத்தை தாண்டி அதிர்ச்சி அளித்து வருகிறது.

இந்த விவகாரங்கள் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. இவற்றுக்கு பொறுப்பேற்று முதல்வர் உத்தவ் தாக்கரே பதவி விலக வேண்டும் என்று சமூக வலைதளத்தில் குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

மும்பையில் உள்ள தனது அலுவலகம் இடிக்கப்பட்டது தொடர்பாக மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை நடிகை கங்கனா ரணாவத் இன்று சந்தித்துப் பேசினார்.
மும்பையில் உள்ள தனது அலுவலகம் இடிக்கப்பட்டது தொடர்பாக மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை நடிகை கங்கனா ரணாவத் இன்று சந்தித்துப் பேசினார்.

இந்த பின்னணியில் முதல்வர் உத்தவ் தாக்கரே தொலைக்காட்சி மூலம் மாநில மக்களிடையே உரையாற்றினார்.
“நான் அரசியல் பேச விரும்பவில்லை. எனினும் மகாராஷ்டிராவின் பெயருக்கு களங்கம் விளைவிக்க சிலர் முயற்சி செய்கின்றனர் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இயற்கையாக, செயற்கையாக உருவாக்கப்படும் அனைத்து அரசியல் பிரச்சினைகளையும் துணிச்சலாக எதிர்கொள்வேன். எனது அமைதியை பலவீனமாக கருத வேண்டாம். என்னிடம் பதில் இல்லை என்றும் தப்புக் கணக்கு போட வேண்டாம்.

கொரோனா வைரஸுக்கு எதிராகவும் மகாராஷ்டிர அரசு தீவிரமாக போரிடும். வைரஸை கட்டுப்படுத்த மக்கள் மிகுந்த ஒத்துழைப்பு அளிக்கின்றனர். அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.

கொரோனா குறித்து அச்சப்பட வேண்டாம். ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். “எனது குடும்பம், எனது பொறுப்பு” என்ற பிரச்சாரம் மூலம் வைரஸ் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

முகக்கவசம் அணிவதையும் சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் அனைவரும் கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் 30 லட்சம் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன” என்று உத்தவ் தாக்கரே பேசினார்.

மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக பாஜக தலைவர்கள், நடிகை கங்கணா ரணாவத் உள்ளிட்டோர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அவர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *