சென்னை பல்லாவரம் காவல் நிலையத்துக்கு வந்த திருட்டு புகாரால் போலீசாரே குழப்பம் அடைந்துள்ளனர்.
சென்னை திரிசூலம் பச்சையம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் செல்வகுமார் (48) கூலி தொழிலாளி. இவர், கடந்த 1-ம் தேதி வீட்டின் முன் படுத்திருந்தார். வீட்டுக்குள் செல்வகுமாரின் மனைவி, மகள் தூங்கினர்.
2-ம் தேதி அதிகாலை கண்விழித்த செல்வகுமார், கதவு திறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது மனைவியும் மகளும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். பீரோ திறந்துகிடந்தது. அதிலிருந்து தங்க நகைகள், கவரிங் நகைகள் மற்றும் 2 செல்போன்கள் திருட்டுப் போயிருந்தது. இதையடுத்து செல்வகுமார், மனைவி, மகளை எழுப்பி விவரத்தைக் கூறினார்.
கொள்ளை குறித்து செல்வகுமார், பல்லாவரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் செல்வகுமாரின் வீட்டுக்கு வந்த போலீசார், பீரோவிலிருந்த கைரேகையை பதிவு செய்தனர். பின்னர் கைரேகையை பழைய குற்றவாளிகளின் கைரேகையுடன் ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது அது, திரிசூலம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்ராஜாவின் கைரேகையுடன் ஒத்துப்போனது.
அதனால் அவரை போலீசார், தேடினர். அப்போது வெங்கடேஷ் ராஜா, தன்னுடைய கூட்டாளிகளுடன் அந்தப்பகுதியில் உள்ள கல்குவாரியில் பதுங்கியிருககும் தகவல் கிடைத்தது. இதற்கிடையில் செல்வகுமாரின் வீட்டுக்குச் சென்ற வெங்கடேஷ் ராஜாவின் கூட்டாளிகள், அங்கிருந்தவர்களை கற்களால் தாக்கினர்.

இதுதொடர்பாகவும் செல்வகுமார், காவல் நிலையத்தில் புகாரளித்தார். தலைமறைவாக இருந்த வெங்கடேஷ்ராஜா (எ)குண்டன்(22), அவரின் கூட்டாளியான .தினேஷ்குமார் (எ) கட்டா தினேஷ்,(21), .பாலகணேஷ்(23), ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கவரிங் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்தத் தகவல் தெரிந்த செல்வகுமார், என்னுடைய வீட்டிலிருந்து கவரிங் நகைகள் மட்டுமல்ல, மூன்றரை சவரன் தங்க நகைகள், 2 செல்போன்களையும் திருடியுள்ளனர் என்று கூறினார். ஆனால் போலீசாரிடம், கைதானவர்கள் கவரிங் நகை எனத் தெரியாமல் திருடிவிட்டோம். அதை விற்க முயன்றபோதுதான் கவரிங் நகை என எங்களுக்கே தெரிந்தது என்று கூறியுள்ளனர்.
திருடர்களின் வாக்குமூலத்தை கேட்பதா அல்லது செல்வகுமாரின் புகாருக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பதா என்ற குழப்பத்தில் பல்லாவரம் போலீசார் உள்ளனர்.