அமெரிக்காவின் யூட்டா மாகாணம், செயின்ட் ஜார்ஜ் நகரில் டிக்ஸி மலை உள்ளது. 3 ஆயிரம் அடி உயரம் கொண்ட இந்த மலை, சுற்றுலா பயணிகள், மலையேற்ற வீரர்களின் விருப்பமான இடமாகும்.
சில நாட்களுக்கு முன்பு இந்த மலைக்கு ஒரு பெண்ணும் அவரது ஆண் நண்பரும் வந்தனர்.
மலையேற்றத்தின் மீது அதீத ஆர்வம் கொண்ட இருவரும் டிக்ஸி மலையில் ஏறினர். எதிர்பாராதவிதமாக மலையில் ஏறிய பெண்ணின் தலைமுடி ஒரு கொக்கியில் மாட்டிக் கொண்டது. அவரால் ஏறவும் முடியவில்லை. இறங்கவும் முடியவில்லை. அவரோடு வந்த ஆண் நண்பர் மலை மீது ஏறிவிட்டார்.
அப்போது டிக்ஸி மலைக்கு அதே பகுதியை சேர்ந்த டிக்ஸி ஸ்டேட் பல்கலைக்கழக கால்பந்து குழு சென்றது. அந்த குழுவிடம் ஆண் நண்பர் உதவி கோரினார்.
களத்தில் இறங்கிய கால்பந்து குழுவின் பயிற்சியாளரும் வீரர்களும் பல மணி நேரம் போராடி அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர்.
இதுகுறித்து போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மீட்கப்பட்ட 20 வயது பெண்ணின் விவரங்களை கால் பந்து குழுவினரும் வெளியிடவில்லை. போலீஸாரும் எவ்வித தகவலையும் தெரிவிக்கவில்லை.
எனினும் சுற்றுலா பயணிகள், சாகச மலையேற்ற வீரர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெண்ணை பத்திரமாக மீட்ட வீடியோக்களை கால்பந்து குழுவினர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். மயிர்க்கூச்செரியும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.