தமிழகத்தில் வணிக வளாகங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. அதன்பின் கடந்த மே 31-ம் தேதி வரை 4 கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் முதல் ஊரடங்கில் தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. இதை பின்பற்றி தமிழக அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்கிறது.
செப்டம்பர் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் வணிக வளாகங்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.
இதைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தமிழகம் முழுவதும் அனைத்து வணிக வளாகங்களும் திறக்கப்பட்டன.
எனினும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வணிக வளாகங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வணிக வளாகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும்.
ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். வணிக வளாகத்தில் தனிமனித இடைவெளியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். வணிக வளாக நுழைவு வாயிலில் கண்டிப்பாக சானிடைசர் வைக்க வேண்டும்.
வாடிக்கையாளர்கள் உள்ளே நுழைவதற்கு ஒரு வழியும் வெளியே செல்வதற்கு ஒரு வழியும் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வணிக வளாகங்கள் திறக்கப்பட்டிருப்பதால் வாடிக்கையாளர்களும் ஊழியர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும் சுகாதாரத் துறை நிபுணர்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறும்போது, “ஊரடங்கு தளர்த்தப்பட்டிருப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். வைரஸ் பரவல் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. தமிழக மக்கள் இனிமேல் மிகுந்த உஷாராக இருக்க வேண்டும்.
ஊரடங்கு தளர்த்தப்பட்டிருப்பதால் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் ஆபத்து உள்ளது.
எனவே தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளனர்.