உங்கள் துறையில் முதலமைச்சர் குறைதீர்க்கும் முகாமில் கமிஷனர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் அதிரடி

காவலர்கள், காவல்துறை அதிகாரிகளின் குறைகளைக் கேட்டறிய முகாமை ஏற்பாடு செய்ய உத்தரவிட்ட கமிஷனர் சங்கர் ஜிவால், தொடர்ந்து ஏழரை மணி நேரம் மனுக்களை பெற்றியிருக்கிறார். அப்போது குறைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் அனைத்து காவலர்களின் குறைகளைக் கேட்டறிய உங்கள் துறையில் முதலமைச்சர் என்ற குறைதீர்க்கும் முகாமை நடத்த கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்பேரில் அனைத்து கமிஷனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு காவலர்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி 2ம் தேதி மாலை 3 மணியளவில் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்களில் இந்த முகாம் தொடங்கியது. கமிஷனர் சங்கர் ஜிவால், கலந்து கொண்டு அதிகாரிகள், காவலர்களிடம் இருந்து மாலை 3 மணி முதல் இரவு 10 30 மணி வரை தொடர்ந்து ஏழரை மணி நேரம் மனுக்களை பெற்றார்.

அப்போது அவர் காவலர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். அப்போது சாலை விபத்தில் உயிரிழந்த ஆயுதப்படை பிரிவு முதல் நிலைக் காவலர் ராமச்சந்திரனின் மனைவி பாரதியிடம் சக ஆயுதப்படை காவலர்கள் அளித்த 6 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். பாரதி, அவரின் குழந்தையிடம் கமிஷனர் சங்கர் ஜிவால் அன்போடும் அக்கறையாகவும் விசாரித்தார். இந்தக் குறைதீர்ப்பு முகாமில் 1359 மனுக்கள் பெறப்பட்டன.

இடமாறுதல், தண்டனைக் குறைப்பு, ஊதிய முரண்பாடு களைதல், காவலர் குடியிருப்பு வேண்டுதல் காவலர் சேமநல நிதியிலிருந்து மருத்துவ உதவி தொகை பெற்று தர கோருதல் தொடர்பாகவே அதிகளவில் மனுக்கள் வந்தன. மனுக்களைப் பெற்ற கமிஷனர் சங்கர் ஜிவால், ஒவ்வொரு மனுக்களுக்கும் விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்தில் கைகுழந்தையோடும் காவலர்கள் கலந்து கொண்டனர். காவலர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு நடத்தப்பட்ட இந்த குறைதீர்க்கும் முகாமில் தங்களின் மனகுமுறல்களை மனுக்களாக அனைவரும் கொடுத்தனர். இதுபோன்ற செயல்பாடுகள் காவலர்கள், காவல்துறை அதிகாரிகளின் மனஅழுத்தத்தைக் குறைக்க வழிவகுக்கும்.

தொடர்ந்து இதுபோன்ற குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என ஒட்டுமொத்த காவலர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்தக் கூட்டத்தில் கூடுதல் ஆணையர் லோகநாதன், துணை கமிஷனர்கள் பாலாஜி சரவணன், சௌந்தராஜன், ரவிச்சந்திரன், கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். இன்றும் உங்கள் துறையில் முதலமைச்சர் என்ற காவலர்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *