ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். இதைத் தொடர்ந்து துணை முதல்வர், காங்கிரஸ் மாநில தலைவர் பதவி பைலட்டின் இருந்து பறிக்கப்பட்டது.
மேலும் பைலட், அவரது ஆதரவாளர்கள் என 19 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய ராஜஸ்தான் சட்டப்பேரவை சபாநாயகர் சி.பி.ஜோஷி நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீஸுக்கு எதிராக ராஜஸ்தான் ஐகோர்ட்டில் சச்சின் வழக்கு தொடர்ந்தார். சபாநாயகர் ஜோஷி சுப்ரீம் கோட்டுக்கு சென்றார்.

ஐகோர்ட்டில் நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வரும் 27-ம் தேதி வரை சச்சின் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது. வரும் 27-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில் ஐகோர்ட் தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே முதல்வர் அசோக் கெலாட் நேற்று முன்தினம் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்று தர்ணாவில் ஈடுபட்டார். அவரது தலைமையில் நேற்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
முதல்வர் அசோக் கெலாட் கூறும்போது, “ராஜஸ்தான் சட்டப்பேரவையை ஆளுநர் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும். ஆளுநர் செயல்படாவிட்டால் ஜனாதிபதியை சந்தித்து முறையிடுவோம். தேவைப்பட்டால் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்கிறது. அவர்களின் சதியை முறியடிப்போம்” என்று தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகை வளாகத்தில் கூடிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உரக்க கோஷமிட்டு ஊரை கூட்டினர். இதேபாணியில் கும்பலாக டெல்லிக்கு சென்று பிரதமர் வீட்டின் முன்பு கோஷமிடுவோம் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மொத்தம் 200 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் பெரும்பான்மையை நிரூபிக்க 101 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.

காங்கிரஸுக்கு 107 எம்எல்ஏக்களின் பலம் இருந்தது. சச்சின் பைலட் அவரது ஆதரவாளர்கள் என 19 எம்எல்ஏக்கள் பிரிந்து சென்றிருப்பதால் காங்கிரஸின் பலம் 88 ஆகக் குறைந்துள்ளது. எனினும் 10 சுயேச்சை எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவு அளிக்கின்றனர். மார்க்சிஸ்ட் 2, பாரதிய பழங்குடி கட்சி -2 என மேலும் 4 எம்எல்ஏக்கள் அரசுக்கு பக்கபலமாக உள்ளனர். ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கூட்டணியில் 102 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
பாஜகவுக்கு 72 எம்எல்ஏக்களும் அதன் கூட்டணி கட்சியான ஆர்எல்பி-க்கு 3 எம்எல்ஏக்கள் உள்ளனர். மேலும் சச்சின் பைலட் அணியின் 19 எம்எல்ஏக்களும் 3 சுயேச்சைகளும் பாஜகவின் கைவசம் உள்ளனர். அந்த வகையில் பாஜகவுக்கு 97 எம்எல்ஏக்களின் பலம் உள்ளது.
ராஜஸ்தான் நிலவரம் குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறும்போது, “சட்டப்பேரவையை கூட்டாமல் வேண்டுமென்றே இழுத்தடிக்கின்றனர்.
இதன்மூலம் மேலும் சில காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்க திரைமறைவில் முயற்சி நடைபெறுகிறது” என்று தெரிவித்தன.
காங்கிரஸின் கெத்தை நிரூபிப்போம் என்று முதல்வர் அசோக் கெலாட் கூறுகிறார். காங்கிரஸ் ஆட்சியில் நீடிக்குமா இல்லை பாஜகவிடம் பறிகொடுக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.