நாட்டில் புதிதாக ஆலைகளைத் தொடங்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அனுமதி பெற வேண்டும். இதுதொடர்பான விதிகளில் மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அல்லது தேசிய நலன் சார்ந்த திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் மதிப்பீடு தேவையில்லை என்று வரைவு அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்கான காலஅவகாசமும் குறைக்கப்பட்டுள்ளது.

இவை உட்பட பல்வேறு விவகாரங்ளை சுட்டிக் காட்டும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் வரைவு அறிக்கையை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள கட்டுரையில், “பருவநிலை மாற்றம், தொற்று நோய்களுக்கு எதிராக இந்தியா முன்வரிசையில் நின்று போராடி வருகிறது. இந்த சூழ்நிலையில் சுற்றுச்சூழல் விதிகளை சீர்குலைக்க வேண்டாம். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. ” என்று தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தியின் கட்டுரையை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, “இயற்கையை பாதுகாத்தால் அவள் நம்மை பாதுகாப்பாள். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சில நாட்களுக்கு முன்பு கூறும்போது, “எதிர்க்கட்சி தலைவர்கள் ஒரு வரைவு அறிக்கைக்கு எதிராக முதிர்ச்சியில்லாமல் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த வரைவு அறிக்கை தொடர்பாக ஆயிரக்கணக்கான யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் பரிசீலிக்கப்படும்” என்று தெரிவித்தார்.