சென்னையில் காவலராகப் பணியாற்றும் பழனிகுமார் என்பவர் அத்தை மகளான 17 வயது சிறுமியைத் திருமணம் செய்ததால் போக்சோ வாக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பழனிகுமார், 27 வயதான இவர், சென்னை மாதவரம் பால்பண்ணை காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு டிரைவராகப் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் மருத்துவ விடுப்பில் ஊருக்குச் சென்ற பழனிகுமார், விடுமுறை முடிந்து வரும்போது மனைவியுடன் சென்னை திரும்பினார். இந்த அவசர திருமணம் குறித்து பழனிகுமாரின் நண்பர்கள் விசாரித்தனர். அதற்கு அவர் ஏதோ பதில் சொல்லி சமாளித்தார்.
இந்தச் சமயத்தில்தான் மாதவரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணகியிடம், மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் ரேவதி என்பவர் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் காவலர் பழனிகுமார், 17 வயது சிறுமியைத் திருமணம் செய்திருக்கிறார். அதனால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் கண்ணகி, காவலர் பழனிகுமாரிடம் விசாரித்தார். அப்போது நான் திருமணம் செய்தது உண்மைதான் என பழனிகுமார் கூறினார். ஆனால் மனைவிக்கு 18 வயதாகி விட்டதாக கூறியதாக் சொல்லப்படுகிறது.

இதைடுத்து பழனிகுமார் திருமணம் செய்த சிறுமியின் வயது சான்றிதழ் ஆதாரமாக காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டதால் பழனிகுமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் பழனிகுமார் மீது குழந்தைகள் திருமண தடைச் சட்டம், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பழனிகுமார், 2016-ம் ஆண்டுதான் தமிழக காவல்துறையில் காவலராகப் பணிக்குச் சேர்ந்திருக்கிறார். ஆயுதப்படை மோட்டார் வாகனப்பிரிவில் பணியாற்றிய அவர் சமீபத்தில்தான் மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்துக்கு இடமாற்றப்பட்டிருக்கிறார். பின்னர் இன்ஸ்பெக்டருக்கு டிரைவராக பணியாற்றியபோதுதான் வீட்டிலிருந்து பழனிகுமாருக்கு போன் வந்திருக்கிறது. போனில் பேசிய பழனிகுமாரின் குடும்பத்தினர் அவசரமாக ஊருக்குப் புறப்பட்டு வரும்படி கூறியிருக்கின்றனர். அதனால் மருத்துவ விடுப்பில் ஊருக்குச் சென்ற பழனிகுமாருக்கும்அவரின் அத்தை மகளான 17 வயது சிறுமிக்கும் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்திருக்கிறது. 18 வயது நிரம்பாத சிறுமிக்கு காவலர் பழனிகுமார் தாலிக்கட்டியது தொடர்பாக குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் தெரியவர விவகாரம் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியது. காவலர் பழனிகுமாருக்கு நடந்து அவசர திருமணம் , அதுவும் குழந்தை திருமணம் என்பதால் அத்தை மகளைக் கரம் பிடித்த அவர் தற்போது சிறைக் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார்.