போலீஸ்காரரின் மனைவி இப்படிச் செய்யலாமா – அறுந்துப்போன தாலிச் சங்கிலியால் அம்பலமான கொள்ளை நாடகம்

சென்னை திருமுல்லைவாயலில் உள்ள காவலர் குடியிருப்பில் தனியாக இருந்த காவலர் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து நகைகள், பணம் கொள்ளைப்போன வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசிப்பவர் காவலர் தர்மராஜ். 27 வயதான இவர், ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 3-ம் அணியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சந்திரலேகா என்ற மனைவியும் 4 வயதில் மதியழகன் என்ற மகனும் உள்ளனர்.

தற்போது சந்திரலேகா 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். வழக்கம் போல காவலர் தர்மராஜ் கடந்த 25-ம் தேதி வேலைக்குச் சென்று விட்டார். வீட்டில் மகனுடன் சந்திரலேகா இருந்தார். பிற்பகலில் கணவருக்கு போன் செய்த சந்திரலேகா, கொரோனா பரிசோதனைக்காக கவச உடையணிந்து வீட்டுக்கு இரண்டு பேர் வந்தனர்.

பீரோ
பீரோ

அவர்கள் தங்களை சுகாதார பணியாளர்கள் என்று கூறினர். பின்னர் அதில் ஒருவன், இந்தப்பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அதனால் வீடு வீடாக கொரோனா பரிசோதனை செய்து வருகிறோம். வீட்டில் எத்தனை பேர் இருக்கிறீர்கள் என்று கேட்டான்.

அவனிடம் நானும் என் குழந்தையும் மட்டுமே இருக்கிறோம் என்று கூறினேன். குழந்தை தூங்கிக் கொண்டிருந்ததால் எனக்கு மட்டும் கொரோனா பரிசோதனை செய்தான். மூக்கில் ஒரு குச்சியை நுழைத்தான். உடனே எனக்கு மயக்கம் வந்தது.

காவலர் குடியிருப்பு
காவலர் குடியிருப்பு

சுயநினைவை இழந்து மயங்கி விழுந்துவிட்டேன். அதன்பிறகு கண்விழித்து பார்த்தபோது கொரோனா பரிசோதனைக்காக வந்திருந்தவர்கள் இல்லை. வீட்டின் பீரோ திறந்து கிடந்தது. துணிகள் சிதறிக்கிடந்தன.

தாலிச் செயின், பீரோவிலிருந்த நகைகள், பணம் ஆகியவற்றை கொரோனா பணி எனக்கூறி வந்தவர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர் என்று கண்ணீர்மல்க பதற்றத்துடன் கூறினார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தர்மராஜ் வீட்டுக்கு வந்தார்.

மனைவி கூறியதைப் போல பொருள்கள் அனைத்தும் வீடு முழுவதும் சிதறிக்கிடந்தன. இதையடுத்து திருமுல்லைவாயல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர்.

தாலிச் செயின்
தாலிச் செயின்

பிறகு சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். பீரோவிலிருந்த கைரேகைகளை நிபுணர்கள் பதிவு செய்தனர். காவலர் குடியிருப்பில் நடந்த இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இந்தச் சமயத்தில் சந்திரலேகாவிடம் போலீஸார் கொள்ளை எப்படி நடந்தது என்று விசாரித்தபோது அவர், கணவரிடம் கூறிய அதே தகவல்களை கண்ணீர்மல்க தெரிவித்தார்.

சிசிடிவி கேமராவிலும் காவலர் குடியிருப்பில் உள்ளவர்களிடம் போலீஸார் விசாரித்தபோது கொரோனா கவச உடையணிந்து யாரும் வரவில்லை என்பது தெரிந்தது. இந்தச் சமயத்தில்தான் சந்திரலேகாவின் தாலிச் செயின் அறுந்த நிலையில் கிடந்ததை போலீஸார் கண்டறிந்தனர்.

விசாரணை நடத்தும் போலீஸ்
விசாரணை நடத்தும் போலீஸ்

நகைகள், பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் எப்படி தாலிச் செயினை விட்டுச் சென்றார்கள் என்ற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டது. அதுதொடர்பாக சந்திரலேகாவிடம் போலீஸார் கேட்டதற்கு மூக்கில் குச்சியை நுழைத்ததும் தான் மயங்கி விட்டதால் எனக்கு எதுவும் தெரியாது என்று பதிலளித்தார்.

இந்தச் சூழலில் போலீஸார் கொள்ளையர்களை தீவிரமாக தேடிவந்தனர். போலீஸாரின் சந்தேகப் பார்வை தன்மீது விழுந்ததை உணர்ந்த சந்திரலேகா, உறவினர் ஒருவரிடம் நகைகள், பணம் கொள்ளைப் போகவில்லை.

காவலர் வீடு

நான்தான் எனக்குத் தெரிந்த ஒருவரிடம் கொடுத்திருக்கிறேன். நகைகள், பணத்தை தர்மராஜ் கேட்டால் என்ன செய்வதென்று தெரியவில்லை. அதை சமாளிக்கத்தான் கொள்ளைப் போனதாக நாடகமாடினேன் என்று கூறினார்.

அதைக்கேட்ட உறவினர், இந்தத் தகவலை நைசாக தர்மராஜிடம் கூறினார். அதனால் அதிர்ச்சியடைந்த தர்மராஜ், திருமுல்லைவாயல் போலீஸாரிடம் விவரத்தைக் கூறி மன்னிப்பு கேட்டார். இதையடுத்து போலீஸார் சந்திரலேகாவை எச்சரித்து அனுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *