கொரோனா 2-வது அலை ஜூலையில் ஓயும் என்று மத்திய சுகாதாரத் துறையின் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அப்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் வரை பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. ஜூன் மாதத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதன்பிறகு கடந்த செப்டம்பரில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தை தொட்டது. அப்போது நாள்தோறும் ஒரு லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டது.
இதன்பிறகு வைரஸ் பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியது. கடந்த ஜனவரியில் தினசரி தொற்று 10,000-க்கும் கீழாக குறைந்து ஆறுதல் அளித்தது. திடீர் திருப்பமாக கடந்த பிப்ரவரி மத்தியில் கொரோனா 2-வது அலை தொடங்கியது.
கடந்த மார்ச் மாதத்தில் நாள்தோறும் ஒரு லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டது. இந்த எண்ணிக்கை ஏப்ரலில் 2 லட்சத்தை எட்டியது. நடப்பு மே மாதம் தினசரி தொற்று 4 லட்சத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது. கடந்த சில நாட்களாக தினசரி தொற்று 3 லட்சத்துக்கும் கீழாக பதிவாகி வருகிறது.
இந்நிலையில் கொரோனா 2-வது அலை குறித்து மத்திய சுகாதாரத் துறையின் நிபுணர் குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
“அடுத்த 10 நாட்களில் தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சத்தை தொடும். வடகிழக்கு மாநிலங்களிலும் வைரஸ் பரவல் அதிகரிக்கும். இதைத் தொடர்ந்து கொரோனா 2-வது அலை ஜூலையில் ஓயத் தொடங்கும். அதன்பிறகு அடுத்த 6 மாதங்கள் முதல் 8 மாதங்களில் கொரோனா 3-வது அலை தொடங்கும்” என்று நிபுணர் குழு தெரிவித்துள்ளது.