ஆட்டோவில் வீதி,வீதியாக சுற்றிய கொரோனா சடலம்

தெலங்கானாவில் கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை ஆட்டோவில் வீதி, வீதியாக சுற்றியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் சடலங்களை பாதுகாப்பான முறையில் தகனம் அல்லது அடக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிகளும் வெளியிடப்பட்டுள்ளன.


ஆரம்ப காலத்தில் மருத்துவமனைகளின் உதவியுடன் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் சடலங்களை பாதுகாப்பாக தகனம் செய்துவந்தன. தற்போது சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன.


தெலங்கானாவின் நிஜாமாபாத் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் 50 வயது நபர் உயிரிழந்தார். அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் ஒரு ஆட்டோவை வாடகைக்கு அமர்த்தி வீதி வீதியாக சுற்றி சடலத்தை மயானத்துக்கு கொண்டு சென்று எரித்துள்ளனர்.


ஆட்டோவின் குறுக்காக சடலம் எடுத்துச் செல்லப்படும் புகைப்படம் சமூக வலைதளத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.


இதுகுறித்து நிஜாமாபாத் அரசு மருத்துவமனை டீன் நாகேஸ்வர் ராவ் கூறுகையில், ஆம்புலன்ஸுக்காக காத்திருக்காமல் உறவினர்கள் ஆட்டோவில் சடலத்தை எடுத்துச் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனை மறுத்துள்ள உறவினர்கள், மருத்துவமனை நிர்வாகம் தங்களை விரட்டிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டாமல் கொரோனா வைரஸ் விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *