15 லட்சத்தை தாண்டி குதித்தது கொரோனா… இன்று ஒரே நாளில் 48,513 பேருக்கு தொற்று

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று 15 லட்சத்தை எளிதாக தாண்டியுள்ளது. கடந்த ஒரு வாரமாக புதிய வைரஸ் தொற்று 50 ஆயிரத்து தொட்டு நிற்கிறது. ஒருநாள் சிறிது குறைந்தாலும் மறுநாள் சர்ரென்று கூடுகிறது.


மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 48 ஆயிரத்து 513 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 15 லட்சத்தை தாண்டிவிட்டதாக நேற்றிரவே முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

கொரோனா-பரிசோதனைக்காக-விவரங்களை-அளிக்கும்-பெண்
கொரோனா-பரிசோதனைக்காக-விவரங்களை-அளிக்கும்-பெண்


ஆனால் எத்தனை பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற புள்ளிவிவரத்தை சுகாதார அமைச்சகம் இன்று வெளியிடவில்லை. குணமடைந்தோர், சிகிச்சையில் இருப்போரின் விவரங்களை மட்டுமே வெளியிட்டிருக்கிறது.


இதன்படி 9 லட்சத்து 88 ஆயிரத்து 29 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்திருப்பதாகவும் 5 லட்சத்து 9 ஆயிரத்து 447 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 768 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 34 ஆயிரத்து 193 ஆக உயர்ந்திருக்கிறது.

கொரோனா பரிசோதனைக்காக பெண்ணின் சளிமாதிரி எடுக்கப்படுகிறது
கொரோனா பரிசோதனைக்காக பெண்ணின் சளிமாதிரி எடுக்கப்படுகிறது


வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் 2.32 லட்சம் பேர் குணமடைந்திருப்பதாகவும் 1.44 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1.66 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாகவும் 57 ஆயிரம் பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.


தலைநகர் டெல்லி ஒட்டுமொத்த நாட்டுக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறது. அந்த யூனியன் பிரதேசத்தில் ஒரு காலத்தில் புதிய வைரஸ் தொற்று 10 ஆயிரத்தை தொட்டது. அங்கு நேற்று புதிய வைரஸ் தொற்று 600 ஆக குறைந்திருக்கிறது.
மக்கள் தொகை நெரிசல் மிகுந்த டெல்லியில் வைரஸை கட்டுப்படுத்த முடியும் என்றால் நாட்டின் இதர மாநிலங்களில் வைரஸ் பரவலை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை என்று நடுநிலையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *