கொரோனா 19 லட்சம்..பராக்..பராக்.. ஒரே நாளில் 52,508 பேருக்கு தொற்று…

இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக புதிய கொரோனா வைரஸ் தொற்று 50 ஆயிரத்துக்கு மேல் பதிவாகி வருகிறது. அந்த வகையில் 7-வது நாளாக இன்றும் புதிய தொற்று 50 ஆயிரத்தை தாண்டியது.


மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் நாடு முழுவதும் 52 ஆயிரத்து 508 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த வைரஸ் 19 லட்சத்தை தாண்டியுள்ளது.


இதில் 12 லட்சத்து 82 ஆயிரத்து 215 பேர் குணமடைந்துள்ளனர். 5 லட்சத்து 86 ஆயிரத்து 244 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 857 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 39 ஆயிரத்து 795 ஆக உயர்ந்துள்ளது.

உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் பெண் ஒருவருக்கு சளி மாதிரி எடுக்கப்படுகிறது.
உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் பெண் ஒருவருக்கு சளி மாதிரி எடுக்கப்படுகிறது.


வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் நாள்தோறும் 10 ஆயிரம் வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். அந்த மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு 4 லட்சத்து 60 ஆயிரமாக உயர்ந்துள்ளது.


தமிழகம் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 63 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 68 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


அண்டை மாநிலமான ஆந்திரா 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக நாள்தோறும் 10 ஆயிரத்தை தொடும் வகையில் வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. அந்த மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு ஒரு லட்சத்து 66 ஆயிரமாக உள்ளது.


மற்றொரு அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாநிலம் 4-வது இடத்தில் உள்ளது. வைரஸ் பாதிப்பில் 2, 3, 4-வது இடங்களில் தென்மாநிலங்கள் அணிவகுப்பது மிகுந்த கவலையளிக்கிறது.

டெல்லியில் உள்ள உடற்பயிற்சி கூடம் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது.
டெல்லியில் உள்ள உடற்பயிற்சி கூடம் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது.


தலைநகர் டெல்லியில் வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. மக்கள்தொகை நெரிசல் மிகுந்த அங்கு நேற்று 674 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஒரு லட்சத்து 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 10 ஆயிரம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.


உத்தர பிரதேசத்தில் ஒரு லட்சம் பேரும் மேற்குவங்கத்தில் 80 பேரும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிஹார், ஒடிசா, ஹரியாணா மாநிலங்களில் வைரஸ் தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது.
கேரளாவில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்படுகிறது.

அந்த மாநிலத்தில் நேற்று ஆயிரத்து 83 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. 27 ஆயிரத்து 956 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 16 ஆயிரத்து 303 பேர் குணமடைந்துள்ளனர். 11 ஆயிரத்து 540 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 84 பேர் உயிர்பலியாகி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *