கிரிக்கெட்டுக்கு இணையாக இந்திய அளவிலும் உலகளாவிய அளவில் கொரோனா பல்வேறு சோ(சா)தனைகளை படைத்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே கொரோனாவால் தொற்றுகளை (ரன்களை) குவிக்க முடியவில்லை.
அமெரிக்கா, பிரேசில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அவுட் ஆகாமல் அடித்து விளையாடுகிறது.
இந்தியாவில் கடந்த 6-வது நாளாக இன்றும் அரை லட்சத்தை கொரோனா எளிதாக தாண்டியது. மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் நாடு முழுவதும் இன்று 52 ஆயிரத்து 50 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 18 லட்சத்து 55 ஆயிரத்து 745 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் ஆறுதல் அளிக்கும்விதமாக 12 லட்சத்து 30 ஆயிரத்து 509 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 5 லட்சத்து 86 ஆயிரத்து 298 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 803 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 38 ஆயிரத்து 938 ஆக உயர்ந்திருக்கிறார்.
மகாராஷ்டிராவில் மிக அதிகபட்சமாக 4 லட்சத்து 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அந்த மாநிலத்தில் 15 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் உயிர்பலியாகி உள்ளனர்.

இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 22 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3-வது இடத்தில் உள்ள தலைநகர் டெல்லியில் ஒரு லட்சத்து 37 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தாலும் ஒரு லட்சத்து 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 10 ஆயிரம் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திரா, கர்நாடகா, உத்தர பிரதேசம், மேற்குவங்க மாநிலங்களின் நிலைமை மோசமாக உள்ளது. ஆந்திரா, கர்நாடகாவில் கொரோனா தொற்று ஒன்றரை லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.