கொடூர கொரோனா மரணங்கள் – சிறப்பு கட்டுரை

கொரோனா மரணங்கள் கொடூரமானது என ஒற்றை வரியில் சொல்லிவிடலாம். ஆனால் அதற்குள் மனறந்திருக்கும் மனவேதனைகளை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. ஆண் குழந்தை பிறந்துவிட்டால் உனக்கு கொல்லி போட மகன் பிறந்துவிட்டான் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால் கொரோனாவால் இறப்பவர்களின் சடலங்கள் அருகில் கூட உறவினர்களும் ரத்தச் சொந்தங்களும் செல்ல முடியாத கொடூரம் நிலவுகிறது.

சுகாதாரத்துறையினர் தனிமனித கவச உடைகள் அணிந்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் அடக்கம் செய்துவருகின்றனர். அதுவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள வழிகாட்டுதலின்படி இந்த இறுதி சடங்கு நடக்கிறது.

தூக்கி வீசும் வீடியோ

கொரோனா மரணங்களால் மனித நேயமற்ற செயல்கள் ஆங்காங்கே நடப்பது வேதனையளிக்கிறது. புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவரை தூக்கி வீசும் வீடியோ வெளியானது. சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த கீழ்பாக்கம் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர், ஆந்திர மாநில டாக்டர் என இரண்டு டாக்டர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அம்பத்தூர், கீழ்ப்பாக்கம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் மட்டுமல்லாமல் கொரோனாவால் போராடுபவர்களும் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், துறையூரில் நடந்தச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 72 வயதாகும் அந்த மூதாட்டிக்கு 2 மகன்கள். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வாழ்ந்துவருகின்றனர். இளைய மகனின் வீட்டில் மூதாட்டி தங்கியிருந்தார். கடந்த 11-ம் தேதி மூதாட்டியின் இளைய மகன் குடும்பத்தினர் திருமண நிகழ்ச்சிக்காக சென்றனர். அதனால் மூதாட்டி அங்கிருந்து மூத்த மகன் வீட்டுக்கு வந்தார்.

தாயை தள்ளிய மகன்

அம்மா வந்ததும் அவரை அன்போடு வரவேற்ற மூத்தமகன், அவருக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தார். இந்தச் சமயத்தில் மூதாட்டிக்கு இருமல், காய்ச்சல் ஏற்பட்டது. உடனே துறையூர் அரசு மருத்துவமனைக்கு அம்மாவை மூத்த மகன் அழைத்துச் சென்றார். அங்கு மூதாட்டிக்கு கொரோனா பரிசோதைனை செய்ய வேண்டும். அதனால் நாளை காலை மருத்துவமைனைக்கு அழைத்து வாருங்கள் என்று மருத்துவமனை ஊழியர்கள் கூறினர். அதுவரை பாசமாக இருந்த மூத்த மகனின் மூளையில் ஒரு யோசனை தோன்றியது.

அம்மாவை நம் வீட்டுக்கு அழைத்துச் சென்றால் வீட்டிலிருப்பவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், தம்பி வீட்டில் விட்டுவிட்டு செல்லலாம் என யோசித்தார். அதன்படி தம்பி வீட்டுக்கு அம்மாவை அழைத்துச் சென்றபோது அங்கு வீடு பூட்டியிருந்தது. இருப்பினும் அம்மாவை அங்கேயே இறக்கி விட்டு விட்டு வீட்டுக்கு திரும்பினார்.

வீட்டில் பூட்டு

இளைய மகன் வீடு பூட்டியே கிடந்ததால் அந்தத் தெருவில் மூதாட்டி நீண்ட நேரம் காத்திருந்தார். இரவாகியும் இளைய மகன் வீட்டுக்கு யாரும் வரவில்லை. போனில் விசாரித்தபோதுதான் இளைய மகனின் மனைவிக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதால் அவரை திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் தெரியவந்தது.

அதனால் மூதாட்டியை அங்கிருந்தவர்கள் ஆட்டோ மூலம் மூத்த மகன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அங்குச் சென்ற மூதாட்டிக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. மூத்த மகனின் வீட்டிலும் பூட்டு தொங்கியது. அதனால் வீட்டின் முன் காத்திருந்த மூதாட்டிக்கு அங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்கு செல்வது என தெரியாமல் மூதாட்டி திகைத்தார்.

தெருவில் தூங்கிய தாய்

பின்னர் நடுத்தெருவில் அவர் அன்றைய தினம் இரவு படுத்து தூங்கினார். இந்தத் தகவல் சிங்களாந்தபுரம் ஊராட்சி தலைவருக்கு தெரியவந்தது. உடனே அவர், மூதாட்டியை இரண்டு மகன்கள் கைவிட்ட நிலையை அறிந்ததும் ஊர் பொதுமக்கள் சிலரின் உதவியோடு மூதாட்டியை துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். மூதாட்டிக்கு ஏற்பட்ட இந்த நிலைமையைக் கண்டு அனைவரின் கண்களும் கலங்கின.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் நடந்த இன்னொரு சம்பவம் வேதனை அளிக்கிறது. விவாகரத்தான இளம்பெண், சென்னையில் வேலைப்பார்த்து வந்தார். ஊரடங்கால் வேலையை இழந்த அந்தப் பெண், தன்னுடைய சொந்த ஊருக்கு மார்ச் மாதம் சென்றார். தனியாக வசித்த அந்தப் பெண், தன்னுடைய வீட்டில் தங்கியிருந்து கிடைத்த வேலைகளைச் செய்து வாழ்ந்து வந்தார். திடீரென அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உதவிக்கு யாருமில்லை. அதனால் அவர் பல்வேறு சிரமங்களைச் சந்தித்தார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூட ஆளில்லை. அதனால் வீட்டிலேயே படுத்தப்படுக்கையாகினார்.

வீட்டிலேயே உயிரிழந்த பெண்

அந்தப் பெண்ணின் வீடு தொடர்ச்சியாக பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், போன் மூலம் சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சுகாதாரத்துறையினர் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு வந்தனர். கதவைத் தட்டினர். ஆனால் திறக்கப்படவில்லை. அதை அந்தத் தெருவில் உள்ள அனைவரும் வேடிக்கைப்பார்த்தனர். பின்னர் அந்த வீட்டின் கதவை உடைத்து சுகாதாரத்துறையினர் உள்ளே சென்றனர். அப்போது மூச்சு பேச்சு இல்லாமல் அந்தப் பெண் படுத்திருந்தார். உடனடியாக அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்போது அவர் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இந்தத் தகவல் அந்தப்பகுதியில் காட்டு தீ போல பரவியது. கொரோனாவால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகமும் மக்களிடையே எழுந்தது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் அந்தப் பெண் குறித்த விவரங்களை கேட்டனர். அப்போது உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் யாரும் அந்தப் பெண்ணுக்கு இறுதி சடங்கு செய்ய முன்வரவில்லை. அதனால் சுகாதாரத்துறையினரும் அங்கிருந்து நைசாக புறப்பட்டனர். காலை முதல் மாலை வரை அந்தப் பெண்ணின் சடலம் அங்கேயே அநாதையாக கிடந்தது. அவரின் வீட்டின் முன் கூட்டமாக நின்றுக் கொண்டிருந்தவர்கள் ஆளாளுக்கு ஒரு தகவலை பேசிக் கொண்டிருந்தனர்.

மமக இறுதிச் சடங்கு

ஊருக்குள் இப்படி ஒரு சம்பவம் நடந்ததும் ஒன்று திரண்ட சிலர் கிராம நிர்வாக அலுவலகத்துக்குச் சென்றனர். அங்கு இருந்த தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர், சுகாதாரத்துறையினர் ஆகியோரிடம் அந்தப் பெண்ணின் சடலத்தை அப்புறப்படுத்த ஏற்பாடு செய்யும்படி வாக்குவாதம் செய்தனர். அவர்களிடம் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தத் தகவல் தெரிந்ததும் அந்தப்பகுதியைச் சேர்ந்த மனித நேய மக்கள் கட்சியினர் அங்கு வந்தனர். நாங்களே அந்தப் பெண்ணின் இறுதி அஞ்சலியை அவரின் மத வழக்கப்படி செய்கிறோம் என்று கூறினர். அதற்கு வருவாய் துறையினரும் ஊர் மக்களும் சம்மதித்தனர்.

இதையடுத்து தனி மனித கவச உடைகளை அணிந்த மமக-வினர் அந்தப் பெண்ணின் சடலத்தை அங்கிருந்து எடுத்துச் சென்றனர். பின்னர் அவரின் குல வழக்கப்படியும் மத வழக்கப்படியும் இறுதி சடங்கை மமகவினர் செய்தனர். இளம் பெண் இறந்த வீடு முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அந்தத் தெருவில் உள்ளவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். மமகவினரின் இந்த மனித நேய செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகிறது. இதுவரை தமிழகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி மரியாதை செய்துள்ளோம் என்கின்றனர் மமகவினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *