ஆகஸ்ட் 15-க்குள் கொரோனாவுக்கு தடுப்பூசி மத்திய அரசு உறுதி

வரும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய சுகாதாரத் துறையின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி ஆகிய 3 மாநிலங்களில் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 6 லட்சத்து 25 ஆயித்து 544 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்கள் வேலையிழப்பு


கடந்த மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு அமல் செய்யப்பட்டபோது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு படிப்படியாக இயல்பு நிலை வருகிறது. எனினும் ரயில், வாகன போக்குவரத்து இதுவரை சீராகவில்லை.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வரும் 5-ம் தேதி வரை முழுஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. இதர மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.


கொரோனாவால் தமிழகம் உட்பட நாடு முழுவதும் பல கோடி மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் 10 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை ஊதியம் குறைக்கப்பட்டிருக்கிறது.
இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு கொரோனா ஒழிக்க புதிதாக மருந்து கண்டுபிடிக்க வேண்டும். அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா மருந்து ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

12 மருத்துவமனைகளில் பரிசோதனை


அந்த நாடுகளுக்கு இணையாக இந்தியாவிலும் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி தீவிரமடைந்துள்ளது. தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் அண்மையில் கோவைக்ஸின் என்ற புதிய மருந்தை கண்டுபிடித்தது. இந்த மருந்தை மனிதர்களுக்கு அளித்து பரிசோதனை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.


இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வட்டாரங்கள் கூறுகையில், “கொரோனா வைரஸ் மருந்து ஆராய்ச்சியில் பல்வேறு இந்திய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில் பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்த புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளது.

நாடு முழுவதும் 12 மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு புதிய மருந்தை அளித்து பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எங்களது கணிப்பின்படி வரும் சுதந்திர தினத்துக்குள் அதாவது வரும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்படும்” என்று தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *