வாட்ஸ் அப்பில் உதவி கோரிய கொரோனா நோயாளி

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், உதவி கோரிய வீடியோ வாட்ஸ் அப் உட்பட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
“நான் சென்னை பாடி பகுதியில் குடியிருக்கிறேன். இப்போது எல்லோரும் பயப்படுகிற கொரோனா தொற்று நோயாளி நான். கடந்த 4 நாள்களுக்கு முன் எனக்கு சளி, தொண்டை வலி இருந்தது. அதனால் தனியார் ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்தேன். டெஸ்ட் ரிப்போர்ட்டில் எனக்கு கொரோனா உறுதியானது. அதனால் வீட்டில் எமர்ஜென்ஸியாக வைத்திருந்த மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டேன்.

மாநகராட்சி அலட்சியம்


ஆய்வகத்திலிருந்து வாட்ஸ் அப்பில் எனக்கு ரிப்போர்ட் அனுப்பினர். அந்த ரிப்போர்ட் அரசு அதிகாரிகளுக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் அனுப்பியதாக லேப்பிலிருந்தவர்கள் கூறினர். ராத்திரி முழுவதும் தலைவலியால் அவதிபட்டேன். காலையில் மாநகராட்சி அதிகாரிகள் யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை.
அரசு தரப்பில் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள் என நம்பிக்கையோடு இருந்தேன். ஆனால் யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை.

நானே மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தேன். அப்போது வீட்டுக்கு வந்த சுகாதாரத் துறையினர் என் கணவரையும் மாமியாரையும் அழைத்துச் சென்றுவிட்டனர். ஆனால் எனக்கு சாப்பாடு கொடுக்கக்கூட ஆளில்லை. தனியாக வீட்டிலிருந்து அவதிபடுகிறேன். மருத்துவமனை, மருந்தகத்தில் மாத்திரைகள் கேட்டால் தர மறுத்துவிட்டனர். எதற்கு எங்களை உயிரோடு சாகடிக்கிறீர்கள். இது யாருடைய தவறு எனத் தெரியவில்லை. இதன்காரணமாகத்தான் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது என நான் கருதுகிறேன் என்று ஆவேசமாக அந்தப் பெண் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மு.க.ஸ்டாலின் உதவி


அந்த வீடியோவை தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் பார்த்துவிட்டு உடனடியாக கிழக்கு மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான சேகர்பாவுவைத் தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறியுள்ளார். உடனடியாக கொரட்டூர் பகுதியில் குடியிருக்கும் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நாகராஜிக்கு நேற்றிரவு 9.45 மணிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அடுத்த சில நிமிடங்களில் அந்த பெண்ணின் வீட்டுக்கு மருந்து, மாத்திரைகள், முகக் கவசம் ஆகியவற்றுடன் நாகராஜ் சென்றுள்ளார். அவருடன் திமுக மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் சாந்தகுமாரி கொரோனா கவச உடையணிந்து சென்றார். இந்த டீம் செல்வதற்கு முன் திமுக தலைவர் ஸ்டாலின், அந்த பெண்ணிடம் போனில் பேசி விவரங்களை கேட்டுள்ளார். 25 நிமிடங்களுக்குள் அவருக்கு திமுகவினர் உதவிகளை செய்துள்ளனர்.

சேகர்பாபு தகவல்

இதுகுறித்து மாவட்டச் செயலாளர் சேகர்பாபு கூறுகையில், “திமுக தலைவர் ஸ்டாலின் தகவல் தெரிவித்ததும் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து கொடுத்தோம்” என்றார்.

சென்னை ஒமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண், நன்றி தெரிவித்து புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *